RRR: "ஆஸ்கர் வென்றால் இதைத்தான் செய்வேன்…"- ராம் சரண் நெகிழ்ச்சி!

ராஜமௌலி இயக்கத்தில் 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘RRR’. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜத் தேவ்கன், சமுத்திரக்கனி உட்படப் பலர் நடித்திருந்த இத்திரைப்படம் சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராமராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்துக்கு கீரவாணி (மரகதமணி) இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படத்தின் ஸ்பேஷலே இதன் பிரமாண்ட மேக்கிங்தான். குறிப்பாக, உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸிக்கியின் பிரமாண்ட மாளிகையில் எடுக்கப்பட்ட ‘நாட்டு நாட்டு’ பாடல் உலகளவில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வைரலானது. சமீபத்தில் இப்பாடல் கோல்டன் குளோப் விருது விழாவிலும் சிறந்த பாடலுக்கான விருதினை வென்றது. இதையடுத்து மார்ச் 12-ம் தேதி நடைபெறவிருக்கிற 95வது ஆஸ்கார் விருதின் பரிந்துரைப் பட்டியலிலும் இப்பாடல் இடம்பெற்றிருக்கிறது.

‘நாட்டு நாட்டு’ பாடல்

இந்நிலையில் நடிகர் ராம் சரண் இந்த விருது விழாவில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நேர்காணல் ஒன்றில் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இருக்கும் இப்பாடல் விருதினை வென்றால் என்ன செய்வீர்கள் என்று ராம் சரணிடம் நெறியாளர் ஒருவர் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த அவர், “அவர்கள் என்னை எழுப்பி விட்டு வலுக்கட்டாயமாக மேடைக்கு ஏற்றி விருதினைத் தரவேண்டியிருக்கும். ஏனெனில் அந்தத் தருணத்தை என்னால் நம்பவே முடியாது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். எங்களுக்காக மட்டுமல்ல. இந்தியாவுக்காகவும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். திரைத்துறையில் சுமார் 80 ஆண்டுகளில் முதல் முறையாக அகாடமி விருதுக்கு நாங்கள் பரிந்துரைக்கப்படுகிறோம். இது எங்களின் வெற்றி மட்டுமல்ல, நிச்சயம் இந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும். இப்படிச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நான் இதைக் கூறவில்லை. உண்மை இதுதான், அதை நாம் யாரும் மறுக்க முடியாது. பல மக்களின் உணர்வுகள் மற்றும் கலாசாரத்துடன் இது பின்னிப் பிணைந்தது” என்றார்.

மேலும், ‘நாட்டு நாட்டு’ பாடல் உருவாக்கம் பற்றிப் பகிர்ந்து கொண்ட அவர், “உக்ரைனில் தாக்குதல் மற்றும் போர் தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்புதான் நாங்கள் இந்தப் பாட்டை உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்க்கி மாளிகையில் படமாக்கினோம். உக்ரைன் செல்ல வேண்டும் என்று நான் யோசித்ததில்லை. இப்பாடல் மூலம் உக்ரைனுக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. அழகான இடம், அழகான மனிதர்கள் என அழகான அனுபவங்களில் ஒன்றாக உக்ரைன் பயணம் இருந்தது.

அமெரிக்காவில் ராம் சரண்

இந்தியா வந்த பிறகு சுற்றுலாவிற்காக மீண்டும் உக்ரைன் செல்ல வேண்டும் என்று என் குடும்பத்தினரிடம் கூறினேன். ஆனால் அது முடியவில்லை. உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்க்கி மாளிகையில் பாடலின் படப்பிடிப்பை நடத்தினோம். அப்போது வந்த செய்திகளில் டர்க்கைஸ் கட்டடத்தில் அவர் இருக்கும் புகைப்படத்தை நீங்கள் பார்க்கலாம். 15 நாள்கள் மற்றும் 7 நாள்கள் ஒத்திகையில் படப்பிடிப்பு நடத்தினோம். நாங்கள் படமாக்கிய பாடல்களில் மிகவும் கடினமான பாடல் இது” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.