திருச்செந்தூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற திருவிழாக்களில் ஒன்றான மாசி திருவிழா 12 நாட்கள் நடைபெறும். அதன்படி, திருவிழாவின் தொடக்கமாக, கொடியேற்ற விழாவையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைத் திறக்கப்பட்டு விஸ்வரூபத் தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து, கோயில் கொடி மரத்தில் கொடிப் பட்டத்திற்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மகா மண்டபத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது. பின்னர், கொடி மரத்திற்கு பால், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 27 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகனை வழிபட்டனர்.