ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி 4-ம் தேதி உயிரிழந்தார். இதனை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.எஸ் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பாக மேகனா மற்றும் தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் கடந்த ஒரு மாத காலமாக தீவிரமாக நடைபெற்று வந்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என பலதரப்பட்ட மக்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிச்சாமி தெனரசுக்கு ஆதரவாகவும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் வாக்குச்சாவடி உட்பட பல பகுதிகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு வெளி நபர்கள் தொகுதியில் இருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பணிமனைகளை அகற்ற வேண்டும் எனவும் இதற்கு மேல் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 725 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் அறிவித்துள்ளார். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் தமிழக மக்களிடையே நிலவி வருகிறது.