வெவ்வேறு காரணங்களுக்காகக் குமரி சிறையில் அடைபடும் கைதிகள் சிலர் ஒன்றிணைந்து, ஒரு திட்டத்தை வகுத்து அங்கிருந்து தப்பிக்க முயன்றால்..? அதுவே குமரி மாவட்டத்தின் தக்ஸ்!
ஹாலிவுட்டில் பிரபலமான ‘Prison Break’ வகைமை படங்களைப் போலத் தமிழில் வெளிவந்திருக்கும் இந்த ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ நம் இதயத்தைச் சிறைபிடித்ததா? கோட்டை விட்டதா?
2018-ல் மலையாளத்தில் வெளிவந்த ‘ஸ்வதந்திரியம் அர்த்தராத்திரியில்’ படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் பின்கதைகளைக் கொஞ்சம் கத்தரித்து விறுவிறு ஆக்ஷன் த்ரில்லராக படைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பிருந்தா. அதில் பெருமளவில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
எஸ்கேப் பிளானைச் செயல்படுத்தும் அனைவருமே முக்கிய கதாபாத்திரங்கள்தான் என்றாலும் அவர்களை வழிநடத்தும் துடிப்புள்ள இளைஞராக முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுக நாயகன் ஹிருது ஹாரூன் நடித்திருக்கிறார். ஏற்கெனவே இந்தியில் ‘க்ராஷ் கோர்ஸ்’ என்ற வெப்சீரீஸில் சின்னதாய் கவனம் ஈர்த்த ஹாரூன், இதில் நடிப்பிலும் ஆக்க்ஷன் காட்சிகளிலும் வெளுத்துவாங்கியிருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு நல்வரவான அவர் இந்தப் படத்திற்குக் கச்சிதமான தேர்வு.
அவருக்குத் துணைநிற்கும் வலுவான மற்றொரு கதாபாத்திரத்தில் கெத்து காட்டுகிறார் சிம்ஹா. டெரரான ஜெயில் கண்காணிப்பாளராக ஆர்.கே சுரேஷும் கவர்கிறார். நாயகனிடம் காதல் வயப்படுவதைத் தாண்டி நாயகியான அனஸ்வரா ராஜனுக்குப் பெரிய வேலை இல்லை. இவர்கள் இல்லாமல் முனிஷ்காந்த், கல்கி ராஜா, அப்பாணி சரத், இரட்டையர்கள் அருண் – அரவிந்த், தேனப்பன் எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். அனைவருமே கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். முனிஷ்காந்த் நகைச்சுவை கடந்து படத்தின் மைய நீரோட்டத்திலும் கலந்து கவனிக்க வைக்கிறார்.
ஹாலிவுட்டில் ஹிட்டடித்த ‘பிரிசன் பிரேக்’ வகையறா திரைப்படங்களின் முக்கிய பலமாக இருப்பது சிறையில் இருப்பவர்கள் தப்பித்தே ஆகவேண்டும் என்ற பதற்றம் பார்வையாளனுக்கும் தொற்றிக்கொள்வதுதான். அது இந்த படத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங். குட்டி குட்டி பிளாஷ்பேக்குகளில் பின்கதையைச் சொல்லும் ஐடியா நன்றாக இருந்தாலும் எந்த ஒரு தாக்கத்தையும் அந்தக் காட்சிகள் விட்டுச்செல்லாமல் போவது இதற்கு ஒரு முக்கிய காரணம். இதனாலேயே நாயகன் உட்பட எந்த ஒரு கதாபாத்திரத்துடனும் நம்மால் முழுவதுமாகத் தொடர்புப்படுத்திக்கொள்ள முடியவில்லை, அவர்கள் தப்பித்தே ஆகவேண்டுமே என்ற கவலையும் நமக்கு வரவில்லை.
சிறையிலிருந்து தப்பிப்பதற்காக இவர்கள் போடும் திட்டமும் எங்கும் காணாத, கேட்டிராத திட்டமெல்லாம் இல்லை. அதில் இன்னும் சில புத்திசாலித்தனமான விஷயங்களைச் சேர்த்திருக்கலாம். அவ்வப்போது ‘இதெல்லாம் எப்படிச் சாத்தியம்?’ என்ற லாஜிக் கேள்விகளும் எழாமல் இல்லை. இந்தத் திட்டத்தின் இறுதிக்கட்டங்களில் அவசர கதியில் சில கதாபாத்திரங்கள் சேர்க்கப்படுத்துவதும் நம்பும்படியாக இல்லை.
இந்தக் குறைகளைத் தாண்டி நம்மை இருக்கை நுனியில் உட்கார வைப்பது படத்தின் மேக்கிங்தான். ஒளிப்பதிவாளர் ப்ரியேஷ் குருசாமியும், படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனியும் ஸ்டண்ட் கொரியோகிராபியில் ராஜசேகர் மற்றும் பீனிக்ஸ் பிரபுவும் ஒவ்வொரு காட்சியையும் மேம்படுத்தப் போட்டிப்போட்டு உழைத்திருக்கிறார்கள். அதிகமான இரவுக்காட்சிகள் கொண்ட, பெரும்பாலும் ஒரே இடத்தில் நடக்கும் படத்தில் இவர்களது உழைப்பு பளிச்சிடுகிறது. சண்டைக்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்ட விதத்திற்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்!
படத்திற்கு மற்றொரு முக்கிய ப்ளஸ் சாம்.சி.எஸ்ஸின் இசை. ஆங்காங்கே ஓவர்டோஸ் ஆவது போல் தெரிந்தாலும் திரையிலிருக்கும் பரபரப்பைப் பார்வையாளர்களான நமக்குக் கடத்துவதில் முக்கிய பங்கு அவருடைய பின்னணி இசைக்கு உண்டு. இரண்டாம் பாதியில் திரைக்கதை எங்காவது தேங்கி நிற்கும் போதெல்லாம் படத்தைக் காப்பாற்றுபவர்கள் திரைக்குப் பின் இருக்கும் இவர்கள்தான்.
இவர்கள் தப்பித்தே ஆக வேண்டும் என்ற காரணத்தை இன்னும் அழுத்தமாகப் பதிவுசெய்து, சற்றே கூர்மையான எஸ்கேப் பிளானுடன் வந்திருந்தால் இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் முக்கிய ஆக்ஷன் த்ரில்லர் படமாக அமைந்திருக்கும் இந்த `தக்ஸ்’!