ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் இன்று காலை வீடுதோறும் ஒரு கிராம் எடையுள்ள தங்கக்காசு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (வரும் 27-ம் தேதி) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது.
இதற்கிடையே, கடந்த 10 நாட்களாக திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு லஞ்சமாக பணம் மற்றும் பல்வேறு பரிசுப்பொருட்களை வழங்கி வருகின்றனர்.
தொகுதியின் பல்வேறு பகுதிகள் வீடுவீடாக வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ 3000 வழங்கப்பட்டுள்ளது. மேலும், குக்கர், ஸ்மார்ட் வாட்ச், வெள்ளி டம்ளர், கொலுசு ஹாட் பேக், வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
பரிசுப்பொருட்கள் மட்டுமில்லாமல் வாக்காளர்கள் உடுத்திக்கொள்ள வேட்டி, சேலை, பேண்ட், சட்டை உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டன. மேலும், பாத்திரம் கழுவது, துணி துவைப்பது, சிறார்களை குளிக்க வைப்பது போன்ற செயல்களிலும் அரசியல் பிரமுகர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று திமுக சார்பில் இரண்டு வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு டோக்கன் வழங்கப்பட்டது. இன்று காலை முதல் டோக்கனை பெற்றுக் கொண்டு ஒரு கிராம் தங்கக்காசு வழங்கப்பட்டு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.