துருக்கியில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கதால் மாபெரும் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. துருக்கி – சிரியா எல்லையில் கடந்த 6ம் தேதி ஒரே நாளில் மட்டும் மூன்று நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதால் 50 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். அதிகாலையில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டதால், தூங்கிக் கொண்டிருந்தபோது மக்கள் இடிபாடுகளில் சிக்கியதால் உயிரிழப்பு அதிகரித்தது.
நிலநடுக்கத்தில் இருந்து தப்பித்த மக்களும் தங்கள் உறவுகளை இழந்து, வீடுகளை இழந்து நிற்கதியாக இருக்கின்றனர். குறிப்பாக கஹ்ராமன்மராஸ், அதியமான், மாலதியா, தியார்பகிர் உள்ளிட்ட நகரங்கள் முற்றிலும் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
துருக்கி நிலநடுக்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்களை மீட்க இந்திய தேசிய மீட்பு படை அனுப்பப்பட்டது. பாதிக்கப்பட்டோரை மீட்க மருத்துவ உதவி மற்றும் நிவாரணப் பொருட்களுடன் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் அனுப்பபட்டது. சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படைகள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் 100 பணியாளர்களைக் கொண்ட தேசிய மீட்பு படையின் இரண்டு குழுக்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பபட்டன. மேலும் பல்வேறு நாடுகளும் மீட்பு பணிகளுக்கு உதவின.
இந்தநிலையில் துருக்கியில் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் அதிபர் தையிப் எர்டோகன், ஒரு வருடத்திற்குள் இடிந்த வீடுகளை மீண்டும் கட்டுவதாக உறுதியளித்துள்ளார். இருப்பினும் அதிகாரிகள் வேகத்திற்கு முன் பாதுகாப்பை வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் இருந்த சில கட்டிடங்கள் சமீபத்திய நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்தன. எனவே அதற்கேற்றவாறு பாதுகாப்பான முறையில் வீடுகளை மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் மாநில அளவிலான நீச்சல் போட்டி துவக்கம்:
மேலும் வீடற்ற நிலையில் தெருவில் வசிக்கும் நிலையில் உள்ள பல குடிமக்களுக்கு அரசாங்கம் கூடாரங்களை அனுப்பியுள்ளது. குறைந்தபட்சம் 15 பில்லியன் டாலர் செலவில் 2 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 70 ஆயிரம் கிராம வீடுகளைக் கட்டுவது என்பது துருக்கிய அரசாங்கத்தின் ஆரம்பத் திட்டமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம், நிலநடுக்கத்தால் 1.5 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாக ஆகியுள்ளனர் எனவும், 5 லட்சம் புதிய வீடுகள் தேவைப்படுவதாகவும் மதிப்பிட்டுள்ளது.
உளவு பார்த்த விவகாரத்தில் 6 சீன நிறுவனங்களுக்கு தடை; அமெரிக்கா அதிரடி.!
முந்தைய நிலநடுக்கத்தின் கோர பாதிப்புகளில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், துருக்கியில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இன்றைய நிலநடுக்கம், இம்முறை ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது, இது மத்திய துருக்கியின் நிக்டே மாகாணத்திற்கு அருகில் மையம் கொண்டிருந்ததாக துருக்கிய பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அரசாங்கமும், மக்களும் செய்வதறியாமல் திகைத்து போய் உள்ளனர்.