ரீமேக் படங்களைப் புறக்கணிக்கும் பாலிவுட் ரசிகர்கள்
இந்தியத் திரையுலகத்தில் பாலிவுட் என அழைக்கப்படும் ஹிந்தித் திரையுலகம்தான் கடந்த சில வருடங்கள் முன் வரை இந்திய அளவிலும், உலக அளவிலும் ஆட்சி செய்து வந்தது. அந்த ஆட்சியை தென்னிந்தியத் திரைப்படங்கள் கீழிறக்கி அதல பாதாளத்தில் தள்ளியது.
'பாகுபலி 2, புஷ்பா, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் அபரிமிதமான வெற்றி ஹிந்தித் திரையுலகத்தை நிறைய அதிர வைத்தது. பாலிவுட் ரசிகர்களுக்கு தென்னிந்தியப் படங்கள் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்தது. அதன் காரணமாக ஹிந்திப் படங்களையும் அவர்கள் தென்னிந்தியப் படங்கள் போல எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவாக கடந்த சில வருடங்களாக வெளிவந்த பல முக்கிய நடிகர்கள் நடித்த ஹிந்தித் திரைப்படங்கள் படுதோல்வி அடைந்தன.
அந்தத் தோல்விகளை சமீபத்தில் வந்த 'பதான்' படம் மீட்டெடுத்தது என பாலிவுட்டினர் நிறைய சந்தோஷப்பட்டார்கள். ஆனால், வெற்றி பெற்றது ஷாரூக்கான் மட்டும்தான் பாலிவுட் அல்ல என்பதை கடந்த இரண்டு வாரங்களாக வெளிவந்த சில முக்கிய படங்களின் ரிசல்ட் நிரூபித்துவிட்டது.
பத்து நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் ஹிந்தி ரிமேக்கான 'ஷெஸதா' படமும், இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்த மலையாளப் படமான 'டிரைவிங் லைசென்ஸ்' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'செல்பி' படமும் படுதோல்வி அடைந்துள்ளன. இரண்டு படங்களுமே 100 கோடி வரை செலவு செய்து எடுக்கப்பட்ட படங்கள். 'ஷெஸதா' படம் இதுவரையிலும் 40 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. 'செல்பி' படம் இரண்டு நாள் வசூலில் 10 கோடியைக் கூடத் தாண்டவில்லை.
பெரும் வெற்றி பெற்ற தென்னிந்தியப் படங்களை ரீமேக் செய்து எடுக்கப்படும் ஹிந்திப் படங்களைக் கூட ரசிகர்கள் புறக்கணித்துவிட்டனர். இதனால், செய்வதறியாது திகைத்து வருகிறது பாலிவுட்.