100 ஆண்டுகளுக்கு முன் `பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்' சொன்ன பண ரகசியம்… | பர்சனல் ஃபைனான்ஸ் – 7

உங்கள் சம்பாத்தியத்தில் உங்களுக்கு எத்தனை சதவிகிதம்?

இது என்ன வித்தியாசமான கேள்வி என்கிறீர்களா? ஒருவரின் சம்பளத்தில் அல்லது சம்பாத்தியத்தில் அவருக்கு என 10 சதவிகித தொகையை தனியே முதலிலேயே எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இதனை ஆங்கிலத்தில், ‘Pay Yourself First 10% Rule’ விதிமுறை என்பார்கள்.

முதலீடு

குறைந்தபட்சம் 10% பணம்..!

‘பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்’ (The Richest Man In Babylon)  என்கிற நூல் 95 ஆண்டுகளுக்கு  முன் 1927 -ம் ஆண்டு வெளியானது. அதில்  நூலாசிரியர் ஜார்ஜ் எஸ். கிளாசன், ”நீங்கள் பணப்பையில் போடும் பத்து நாணயங்களில் ஒன்பதை மட்டும் செலவழியுங்கள். இவ்வாறு செய்து வந்தால், பணப்பையானது கனக்கத் தொடங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஒருவர் தனக்காக குறைந்தபட்சம் 10% பணத்தை சேமிக்க வேண்டும் என குறிப்பிடுகிறார். கூடவே சேமிப்பு இன்றி செல்வந்தர் இல்லை என்கிறார்.

‘முதலில், உங்களுக்கு பணம் அளித்து கொள்ளுங்கள். அதன் பின்பே பிறருக்கு செலவழியுங்கள்.  அதாவது சம்பளம் கிடைத்ததும், உங்களுக்காக கொஞ்சம் சேமியுங்கள்’ என்கிறார் அமெரிக்காவை சேர்ந்த நிதி ஆலோசகர் ராபர்ட் கியோசாகி. அவரின் ‘ஏழை தந்தை மற்றும் பணக்கார தந்தை’ (Rich dad and Poor dad) என்ற  நூலில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

முதலீடு

அள்ளிக் கொடுங்கள். ஆனால்  உங்களுக்கு என கொஞ்சம் கிள்ளி  வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு கஷ்டம் ஏதும்  வரும்போது உங்களிடம் அள்ளி  எடுத்தவர்கள் கிள்ளி கூட தரமாட்டார்கள் என்பதால் ஒருவரின் சம்பளம், சம்பாத்தியத்தில் தனக்கு என 10 சதவிகித தொகையை சேமிக்க வேண்டும்.

இப்படி பத்து சதவிகித தொகையை தனக்கு என சேமிப்பதால் அப்படி என்ன பெரிய தொகை சேர்ந்து விட போகிறது என்கிறீர்களா?

ஒருவர் தன் சம்பளத்தில் 10 சதவிகித தொகையை சேர்த்து வந்தால் ஓராண்டில் அவரிடம் கிட்டத்தட்ட ஒரு மாத சம்பளத் தொகை சேர்ந்திருக்கும். இதுவே அவர் 10 ஆண்டுகள் சேர்த்தால் அவரிடம் ஒராண்டு சம்பளத் தொகை சேர்ந்திருக்கும். இதனை கொண்டு அவர் புதிய தொழில் தொடங்கலாம். அல்லது தனக்கு, குடும்பத்துக்கு, குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையானவைகளை ஏன் ஓய்வுக் கால செலவுகளை கூட சுலபமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

பி.பி.எஃப் முதலீடு

இப்படி தனக்கு என பணம் சேர்த்து வைத்திருக்கும் போது கூடுதல் மன நிம்மதியுடனும் மிகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும். அலுவலகத்தில் மற்றும் தொழிலில் சிறந்து விளங்க முடியும்.

ஒருவர் சம்பளத்தில் 10 சதவிகித தொகையை தனக்காக சேமிப்பது என்பது சொல்வதற்கு மிக எளிதாக இருக்கும். ஆனால், அதனை நடைமுறைபடுத்துவது ஒரிரு மாதங்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால், அதுவே பழகி விட்டால் சுலபமாகி விடும். இந்தக் கருத்தை ஒட்டிதான் பணியாளர் சேம நல நிதியும் (EPF)  இருக்கிறது. அந்த வகையில் பி.எஃப் பணத்தை கடைசி வரைக்கும் எடுக்காமல் வைத்திருப்பது ஒருவரின் பணி ஓய்வுக் காலத்தை வளமானதாக மாற்றும். மேலும்,  கோடீஸ்வராக பணி ஓய்வு பெற முடியும்.

எதில் முதலீடு செய்வது? 

 இப்படி சம்பளத்தில் தனக்கு என எடுத்து வைக்கும் தொகையை எதில் முதலீடு செய்வது? சம்பளத்தில் 12% இ.பி.எஃப் பிடிக்கப்பட்டால் இப்படி 10% தொகையை தனியே எடுத்து வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அப்படி இல்லாமல் சம்பளத்தில் பி.எஃப் பிடிக்கப்படாதவர்கள் அல்லது வரம்புக்கு உட்பட்டு மாதம் தோறும் ரூ.1,800 மட்டுமே பி.எஃப் ஆக சம்பளத்தில் பிடிக்கப்பட்டால் அவர்கள் 10% அல்லது அதற்கு சற்று குறைவாக 8%, 5% என்பது போல் சம்பளத்தில் தனக்கு என சேர்த்து வரலாம். வாய்ப்பு வசதி உள்ளவர்கள் இபிஎஃப் போக கூடுதலாக 10 சதவிகித தொகையை கூட தனியே சேர்த்து வரலாம்.

முதலீடு

இந்த 10 சதவிகித தொகையை முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் பொது சேம நல நிதி (PPF)  திட்டத்தில் முதலீடு செய்து வரலாம். 15 ஆண்டு திட்டமான இதற்கு ஆண்டுக்கு 7.1% வட்டி வருமானம் கிடைக்கும். முதலீட்டில் மிதமான ரிஸ்க் எடுப்பவர்கள் நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் ஹைபிரிட் ஃபண்ட்களில் முதலீடு செய்து வரலாம். அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

உதாரணத்துக்கு ஒருவரின் வயது இப்போது 28. அவரின் மாதத் சம்பளம் ரூ.50,000 அதில் 10% ரூ.5,000-ஐ அவருக்கு என முதலீடு செய்கிறார் என வைத்து கொள்வோம். இவருக்கு ஆண்டுக்கு சுமார் 10% சம்பள உயர்வு கிடைக்கிறது.

கட்டுரையாளர்: ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com

அந்தச் சம்பள உயர்வுக்கு ஏற்ப அவர்  இரண்டாம் ஆண்டில் ஆரம்ப முதலீட்டுத் தொகையான ரூ.5,000-ல் 10% ஆன ரூ.500 அதிகரித்து ரூ.5,500 என முதலீடு செய்து வருகிறார். இதேபோல் அடுத்தடுத்த ஆண்டுகளில் 10% தொகையை அதிகரித்து வருகிறார். இப்படி செய்து வந்தால் இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 8.5 சதவிகித வருமானம் கிடைத்தாலே அவரின் 60-வது வயதில் ரூ.2.5 கோடி கிடைத்திருக்கும்.

இது வரைக்கும் சம்பளத்தில் உங்களுக்கு என எதுவும் சேமிக்கவில்லை என்றால் இனியாவது சேர்க்க தொடங்குகள். வாழ்த்துகள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.