பிரிந்து வாழ்ந்த கணவர் வீடு முன்பு விஷம் குடித்து மனைவி தற்கொலை

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் மகள் பாண்டீஸ்வரி (21).  பாண்டீஸ்வரி பிஎஸ்சி படித்துள்ளார். மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திருமங்கலம் என்ஜிஓ நகரை சேர்ந்த அசோக்குமார் மகன் நவீன்பிரசாத் (21). இவர் பி.காம் படித்துள்ளார்.  இவர்கள் இருவரும் காதலித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்களது காதல் திருமணத்திற்கு பாதுகாப்பு கேட்டு திருமங்கலம் மகளிர் ஸ்டேஷனில் தம்பதி இருவரும் மனு கொடுத்தனர்.

போலீசார் இரண்டு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் பாண்டீஸ்வரியின் பெற்றோர் இருவரையும் ஏற்று கொண்டனர். நவீன்பிரசாத் பெற்றோர் ஏற்க மறுத்துவிட்டனர். இதனை தொடர்ந்து பாண்டீஸ்வரி வீட்டு மாடியில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினர்.

இந்த நிலையில், நவீன்பிரசாத்தின் பெற்றோர் அடிக்கடி அவரை போனில் தொடர்பு கொண்டு மீண்டும் தங்களிடம் வரும்படி மகனை அழைத்துள்ளனர். அதனை தொடர்ந்து  சில தினங்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டிற்கு சென்ற நவீன்பிரசாத் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டீஸ்வரி கணவர் வீட்டிற்கு சென்று கேட்ட போது அவருடன் சேர்ந்து வாழ முடியாது என நவீன்பிரசாத் கூறிவிட்டார்.

பின்னர் திருமங்கலம் மகளிர் ஸ்டேஷனில் மனைவி மீது அவர் புகார் கொடுத்தார். போலீசார் தம்பதி இருவரையும் அழைத்து விசாரித்த போது, தான் மனைவியுடன் சேர்ந்து வாழவிரும்பவில்லை எனவும், கோர்ட் மூலமாக நடவடிக்கை எடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் மனவிரக்தியடைந்த பாண்டீஸ்வரி கடந்த சில தினங்களாக சோர்வுடன் பணிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், நேற்று கணவர் வீட்டிற்கு சென்று நவீன்பிரசாத் குறித்து விசாரித்த போது அவர் சென்னையில் வேலைக்கு சென்றுள்ளார் என்பது தெரியவரவே அங்கேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் பாண்டீஸ்வரியின் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாண்டீஸ்வரியின் தந்தை பாண்டியராஜன் கொடுத்த புகாரில் வாலிபர் நவீன்பிரசாத், அவரது பெற்றோர் மீது திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.