மதுரை மாவட்டத்தில் முறையாக விநியோகிக்கப்படாத ஆவின் பால் – நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள ஆவின் பூத்-கள் மற்றும் கடைகளுக்கு உரிய நேரத்தில் ஆவின் பால் விநியோகிக்கப்படாததால் பூத் மற்றும் கடை உரிமையாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மதுரையில் அண்ணாநகர் பகுதியில் ஆவின் பால் நிறுவனம் செயல்படுகிறது. பால் பாக்கெட்டுகள் உள்பட பல்வேறு பால் பொருட்கள் இங்கு தயாராகின்றன. இங்கிருந்து பால் மற்றும் பால் பொருட்களை கொண்டு செல்லும் பணியில் 1000க்கும் மேற்பட்ட முகவர்கள் உள்ளனர். 50 போக்குவரத்து வழித்தடங்கள் மூலம் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பால் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

சமீப நாட்களாகவே மதுரை ஆவின் நிறுவனத்தில் இருந்து, பால் பாக்கெட்டுக்களை கொண்டு செல்லும் முகவர்கள் உரிய நேரத்தில் விநியோகிப்பது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக, பால் பூத் முகவர்களும், கடை உரிமையாளர்களும் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. உரிய நேரத்தில் பால் பாக்கெட்டுக்கள் வராததால் அவற்றை விற்க முடியாத நிலை ஏற்படுவதாகவும், மக்களும் ஆவின் பால் கிடைக்காத நிலையில் வேறு பால் பாக்கெட்டுக்களை வாங்கிச் செல்வதாகவும் பால் பூத் முகவர்களும் கடை உரிமையாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

காலை 3 மணிக்குள் பால் பாக்கெட்டுக்கள் வந்தால் தங்களால் முறையாக பால் பாக்கெட்டுக்களை விநியோகிக்க முடியும் என்றும் ஆனால், சில நேரங்களில் காலை 7 மணி அளவில்தான் பால் வருகிறது என்றம் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், வாகனங்களில் வரும் பால் பாக்கெட்டுக்களை வாங்காமல் திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். லட்சக்கணக்கில் பணம் செலுத்தி முகவராகும் தாங்கள், பால் தாமதமாக வருவதால் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். இந்த பிரச்சினைக்கு ஆவின் நிர்வாகம் உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து ஆவின் நிறுவன ஊழியர்கள் சங்கத்தினரிடம் கேட்போது, ”மதுரை ஆவின் நிறுவனத்தில் போதிய நிரந்தர ஊழியர்கள் இல்லை. 2 தனியார் நிறுவனங்கள், கான்ட்ராக்ட் மூலம் ஊழியர்களை நியமித்துள்ளன. அவர்களும் சரியாக பணி செய்வதில்லை. நிர்வாகம் இவர்களை முறையாக வேலை வாங்கவேண்டும். மேலும், ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றனர்.

ஆவின் நிறுவன அதிகாரிகளிடம் பேசியபோது, அவர்கள், ”மதுரை மண்டலத்திற்கு தினமும் சுமார் 2 லட்சம் லிட்டர் பால் தேவை இருக்கிறது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து 1.38 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறோம். எஞ்சிய தேவையை பூர்த்தி செய்ய தேனி ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இது போன்ற நேரங்களில் முகவர்களுக்கான பால் விநியோகம் தாமதமாகலாம். போதிய அளவு பால் கொள்முதல் செய்து சரியான நேரத்தில் முகவர்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். ஆவினில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும். ஒருசில நாட்கள், ஓரிரு பகுதிகள் தவிர பெரும்பாலும் முகவர்களிடம் பால் திரும்பி வருவதில்லை” என தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.