ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தீவிரம்!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை வாக்குப்பதிவு  நடைபெறவுள்ள நிலையில்,  வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.  
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க, ஈரோடு கிழக்கு தொகுதி மூழுவதும் 52 இடங்களில் 238 வாக்குசாவடிகளும், இது தவிர கூடுதலாக 20 சதவீதம் என்ற அடிப்படையில், 48 ரிசர்வ் மையங்கள் என மொத்தம் 286 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடி மையங்களில் 1,206 அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். மேலும், இத்தேர்தலில் 1,430 வாக்குப்பதிவு எந்திரங்கள் (ஈவிஎம்), 310 விவிபேட்கள், 286 கட்டுப்பாட்டு எந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்) பயன்படுத்தப்படுகின்றது.

இவை அனைத்தும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி கிருஷ்ணன் உன்னி, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆகியோர் மேற்பார்வையில், இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்பட்ட 20 சரக்கு வாகனங்களில்,  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும், பென்சில், ரப்பர், பேனா, பசை, ஸ்டேப்ளர், ஸ்டேப்ளர் பின், சிறிய மற்றும் பெரிய பிளாஸ்டிக் டிரே, பிளாஸ்டிக் டிரம், குப்பைகளை போடுவதற்கான பிளாஸ்டிக் பக்கெட், சிறிய கயிறு, நூல், சீல் வைக்க தேவையான பொருள்கள், ஓட்டு பெட்டிகளை மறைத்து வைக்க பயன்படுத்தப்படும் பிரத்யேக அட்டை என 81 வகையான பொருட்களும்  அந்த வாகனத்திலேயே எடுத்துச் செல்லப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கண்டறியப்பட்டுள்ள 32 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில், கூடுதல் காவல்துறை பாதுகாப்புடன், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்காளர்கள்  வாக்களிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.