#BREAKING : மறைந்த இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மனைவி காலமானார்..!!

பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான கே.விஸ்வநாத்தின் மனைவி காசிநாதுனி ஜெயலட்சுமி காலமானார். அவருக்கு வயது 88.

1930-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தவர் இயக்குநர் கே.விஸ்வநாத். இவர், 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். ஒலிப்பதிவாளராக சினிமாவில் தடம்பதித்த இவர், 1975-ல் முதன்முறையாக ‘ஆத்ம கவுரவம்’ என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். இதற்காக கே.விஸ்வநாத்திற்கு நந்தி விருது வழங்கப்பட்டது.

அதன் பின்னர் சிரிசிரி முவ்வா, சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உட்பட பல தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களை இயக்கினார். 50 படங்களுக்கு மேல் இயக்கிய விஸ்வநாத், தமிழில் கமல் நடிப்பில் வெளியான ‘குருதிப்புனல்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அஜித் நடித்த முகவரி, விக்ரம் நடித்த ராஜபாட்டை, சூர்யா நடித்த சிங்கம் 2, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, கமல்ஹாசனுடன் உத்தம வில்லன், குருதிப்புனல், ரஜினிகாந்த் உடன் லிங்கா உள்ளிட்ட ஏராளனான படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ளார். அதேபோல் இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 5 தேசிய விருதுகள், ஆந்திர அரசின் ஏழு நந்திவிருதுகள், 10 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், ஒரு இந்தி பிலிம்பேர் விருது என ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் கே.விஸ்வநாத் ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2-ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்நிலையில் அவருடைய மனைவி ஜெயலட்சுமி நேற்று காலமானார் . வயது முதிர்வின் காரணமாக அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரைத்துறையினர் மற்றும் சினிமா ரசிகர்கள் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.