விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் வழிபட்ட ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர்

கடலூர்: ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற வேண்டி அதிமுக வேட்பாளர் தென்னரசு, விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானதை அடுத்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாளை (27-ம்தேதி) வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் உட்பட 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 1.11 லட்சம் ஆண்கள், 1.16 லட்சம் பெண்கள் உட்பட மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 52இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, கூடுதலாக 48 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 32வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் போலீஸார், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்த பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் முழுவீச்சில் ஈடுபட்ட அனைத்து கட்சி தலைவர்களும், தங்கள் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டனர். இன்று காலை 11 மணி முதல் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

அதிமுக வேட்பாளர் வழிபாடு: இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசு நேற்று தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை விருத்தாசலத்தில் உள்ள பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். இங்கு வழிபடுவதன் மூலம் தனக்கு வெற்றி வாய்ப்பு ஏற்படும் நம்பிக்கையில் அவர் இங்கு வந்து வழிபட்டதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.