மக்களே ரெடியா..!! இன்று தேர்தல் நாள்.. ஓட்டு போட மறக்காதீங்க..!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இதைத்தொடா்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27-ம் தேதி தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் கடந்த ஜனவரி 18-ம் தேதி அறிவித்தது.

கடந்த ஜனவரி 31-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதில் அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் ஏராளமானோா் மனுதாக்கல் செய்தனர். மொத்தம் 121 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 83 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பின்னா் 6 போ் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர். இதைத் தொடா்ந்து கடந்த 10-ம் தேதி இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டு அவா்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப்பதிவு 238 வாக்குச்சாவடி மையங்களில் இன்று (திங்கள்கிழமை) நடக்கிறது. இந்த தோ்தலில் ஆண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 பேரும், பெண் வாக்காளா்கள் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 23 பேர் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

வாக்காளா்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தோ்தலில் தி.மு.க. கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சாா்பில் கே.எஸ். தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சாா்பில் எஸ். ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் ஒரு வி.வி.பேட் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வுதளம் மற்றும் அவா்களுக்கு வீல் சோ் போன்றவையும் தயார் நிலையில் உள்ளன.

இதற்கிடையில் ஈரோட்டில் தற்போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வாக்காளா்கள் வரிசையில் நின்று வாக்களிக்க சிரமமாக இருக்கும் என்பதால் 238 வாக்குச்சாவடி மையங்களின் முன்பும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 100 மீட்டா் மற்றும் 200 மீட்டா் தொலைவில் எல்லைக் கோடுகள் போடப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 33 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு முழுவதுமாக கண்காணிக்கப்படுகிறது.

ஓட்டுபோடுவது ஜனநாயக கடமை…

மக்களே இன்று ஓட்டு போட மறக்காதீங்க..

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.