அருணாச்சலில் இருந்து குஜராத் வரை ராகுலின் 2ம் கட்ட யாத்திரை திட்டம்: காங்கிரஸ் மாநாட்டில் அதிரடி அறிவிப்பு

ராய்ப்பூர்: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அடுத்ததாக அருணாச்சலில் இருந்து குஜராத் வரை 2ம் கட்ட யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என காங்கிரஸ் மாநாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். பல்வேறு மாநிலங்களை கடந்து சுமார் 4,000 கிமீ நடைபயணம் மேற்கொண்ட அவர் சமீபத்தில் காஷ்மீரில் யாத்திரையை நிறைவு செய்தார். இந்த யாத்திரையில் ராகுலுடன் பலதரப்பு தலைவர்களும், மக்களும் பங்கேற்றனர். இந்த யாத்திரை தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, காங்கிரஸ் கட்சியிலும் புதிய நம்பிக்கையை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில், 2ம் கட்ட இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார். இதனை அவர் காங்கிரஸ் மாநாட்டில் சூசகமாக வெளியிட்டுள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரசின் 85வது மாநாடு நடைபெற்றது. 3 நாள் நடந்த மாநாட்டின் நிறைவு நாளான நேற்று ராகுல் பேசுகையில், ‘‘பாரத் ஜோடோ யாத்திரை மூலம் உருவாக்கியுள்ள புத்துணர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல புதிய திட்டத்தை கட்சி வகுக்க வேண்டும். அதில் ஒட்டுமொத்த நாட்டு மக்களுடன் நானும் இணைந்து பங்கேற்பேன்’’ என்றார். இதன் மூலம் ராகுல் 2ம் கட்ட நடைபயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது உறுதியாகி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான யாத்திரையின் மூலம் மற்றொரு யாத்திரைக்கான உற்சாகமும் ஆற்றலும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் மற்றொரு யாத்திரை அவசியம் தேவை என நானும் கருதுகிறேன். எனவே, 2ம் கட்ட இந்திய ஒற்றுமை யாத்திரை அருணாச்சலப் பிரதேசத்தின் பாசிகட்டில் இருந்து குஜராத்தின் போர்பந்தர் வரை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மேற்கொள்ள பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த 2ம் கட்ட யாத்திரை, முந்தைய யாத்திரையிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கலாம். காரணம், இந்த வழித்தடம் அதிக வனப்பகுதிகள், ஆறுகள் கொண்டது. எனவே குறைவான யாத்திரீள்கள் மற்றும் பெரிய அளவில் உள்கட்டமைப்புகள் இல்லாமல் இருக்கலாம். பெரும்பாலும் இது நடைபயணமாகத்தான் இருக்கும். ஏப்ரலில் கர்நாடகாவிலும் பின்னர் நவம்பரில் வேறு பிற மாநிலங்களிலும் தேர்தல்கள் நடக்க இருப்பதால், 2ம் கட்ட யாத்திரையை ஜூனில் இருந்து நவம்பருக்குள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது. பாரத் ஜோடோவை விட இந்த யாத்திரை குறுகிய காலமானதாக இருக்கும். இது குறித்த முழுமையான இறுதி அறிவிப்பு அடுத்த சில வாரங்களில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* காங்கிரசின் புதிய தொடக்கம் மாநாட்டில் நிறைவாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ‘‘இன்று, நம் முன் பல சவால்கள் உள்ளன. ஆனால் காங்கிரசால் அவற்றை சமாளிக்க முடியும். அதற்கு ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் உறுதிப்பாடு தேவை. நமது பலம் கட்சியின் பலத்தில் உள்ளது. இந்த மாநாடு இன்றுடன் முடிவடையலாம். ஆனால் இது  காங்கிரசின் புதிய தொடக்கம்’’ என்றார்.

* ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி

* அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சவால்களை எதிர்கொள்ளவும் பொதுவான, ஆக்கபூர்வமான திட்டத்தின் அடிப்படையில் ஒத்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் தயாராக உள்ளது.

* இந்த ஆண்டில் கர்நாடகா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் முடிவுகள் வரும் 2024 மக்களவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், கட்சித் தொண்டர்களும் தலைவர்களும் முழுமையான ஒற்றுமையுடன் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

* பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்சின் மோசமான அரசியலுடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாத ஒரே கட்சி காங்கிரஸ்.

* பாஜவின் எதேச்சாதிகார, வகுப்புவாத மற்றும் கூட்டு முதலாளித்துவத் தாக்குதலுக்கு எதிராக நமது அரசியல் விழுமியங்களைப் பாதுகாக்க நாங்கள் எப்போதும் போராடுவோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.