ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | வாக்குப்பதிவு தொடங்கியது; மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

ஈரோடு: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சரியாக இன்று (பிப்.27) காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருந்தனர். இத்தேர்தலில் 2.27 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

நாம் தமிழர் வேட்பாளர் வாக்களிப்பு: வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன், தொகுதிக்கு உட்பட்ட கலைமகள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் பேட்டியளித்த அவர், “வீதியில் இறங்கி போராடாத நிலை வேண்டுமென்றால் மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். தேர்தல் ஏற்பாடுகள் திருப்தியளிக்கின்றன. மாலைவரை இதே நிலை நீடிக்க வேண்டும். மக்கள் வாக்களிக்க ஆர்வத்துடன் காத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதனால் எனது வெற்றிவாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக உணர்கிறேன்” என்றார்.

களத்தில் 77 வேட்பாளர்கள்: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராகாலமானதை அடுத்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று (பிப்.27) வாக்குப்பதிவு நடக்கிறது.

காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 1.11 லட்சம் ஆண்கள், 1.16 லட்சம் பெண்கள் உட்பட மொத்தம் 2.27 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 1,206 அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.

வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் 1,430 வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் 310 விவிபாட்இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்)அனைத்தும் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. ஜிபிஆர்எஸ் கருவிபொருத்தப்பட்ட 20 சரக்கு வாகனங்களில், 20 மண்டல அலுவலர்களின் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இவை அனைத்தும் அனுப்பப்பட்டன. தேர்தல் தொடங்கி நடைபெற்றுவரும் சூழலில் தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம் தேதி வெளியிடப்படுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.