எடப்பாடி ஜெயிக்கல… ஓபிஎஸ்க்கு செம சான்ஸ்… அதிமுக பொதுக்குழு தீர்ப்பில் இதை கவனிச்சீங்களா?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடப்பதற்குள் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி பரபரப்பை கொளுத்தி போட்டது. இது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
ஓ.பன்னீர்செல்வம்
இனிமேல் அவ்வளவு தான் என காரசாரமாக விவாதங்கள் வெடித்தன. ஆனால் தீர்ப்பை முழுமையாக படித்து பார்த்த அரசியல் விமர்சகர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் முழுவதுமாக அப்படி சொல்லிவிட முடியாது என்கின்றனர். இந்த விவகாரத்தை தொடக்கத்தில் இருந்து அணுகுவோம்.

அதிமுக பொதுக்குழு செல்லாது

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி முன்பு விசாரிக்கப்பட்ட சிவில் உரிமையியல் சார்ந்த வழக்கில், ஜூலை 11, 2022ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என உத்தரவிடப்படுகிறது. இதனை எதிர்த்து
எடப்பாடி பழனிசாமி
தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இரட்டை நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு செல்கிறது. இதில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

இரட்டை நீதிபதி அமர்வு

அதேசமயம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகியவை தனி நீதிபதி முன்பு முடிவு செய்யப்பட வேண்டிய விஷயங்கள் என உத்தரவிடுகின்றனர். இந்த இரட்டை நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. இதில் வழக்கு என்பது அதிமுக பொதுக்குழு செல்லுமா? செல்லாதா? என்பது மட்டும் தான். இருப்பினும் தீர்மானங்கள், அவை நிறைவேற்றப்பட்ட விதம் ஆகியவற்றை நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர். ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பிற விஷயங்கள் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. கீழமை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியது எனக் கூறினர். அதன்படி ஓபிஎஸ் நீக்கப்பட்டது, எடப்பாடி இடைக்கால பொதுச் செயலாளர் ஆனது, இடையீட்டு மனுக்கள் உள்ளிட்ட அனைத்தையும் இந்த நீதிமன்றத்தில் முடித்து வைக்கிறோம்.

தீர்மானங்கள் என்னாச்சு?

இவற்றை சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அப்படியெனில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நீதிமன்றம் இன்னும் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதன்மூலம் ஓபிஎஸ் நீக்கப்பட்டது, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது என எதுவுமே செல்லுபடியாகாது. எனவே ஓ.பன்னீர்செல்வத்திற்கு முழுமையான தோல்வி கிடையாது.

தேர்தல் ஆணையத்தின் முடிவு

இவர்கள் அடுத்தகட்டமாக கீழமை நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் முறையிட திட்டமிட்டுள்ளனர். இதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை இன்னும் அங்கீகரிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரம் அளித்துள்ளது. இதேபோல் தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி பத்திரம் அளித்துள்ளார்.

இடைக்கால பொதுச் செயலாளர்

மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து அடுத்த 4 மாதங்களில் தேர்தல் நடத்தி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் காலாவதியாகி விட்டது. அப்படி பார்த்தால் எடப்பாடி பழனிசாமி தற்போது எந்தவித பதவியிலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதேசமயம் இடைக்கால பொதுச் செயலாளர் ஆவதற்கு முன்னதாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார்.

தீராத சிக்கல்

தீர்ப்பில் பொதுக்குழு மட்டுமே செல்லுபடியாகும். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், முடிவுகள் குறித்து நீதிமன்றம் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் ஓபிஎஸ்சும் எந்த பதவியிலும் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. இவர்கள் இருவரும் மாறி மாறி அதிமுகவிற்காக போராட போவது மட்டும் தெரிய வருகிறது. அதற்கு சட்ட ரீதியிலான வாய்ப்புகள் உள்ளன. வரும் 2024 மக்களவை தேர்தலுக்குள் அதிமுகவின் பிரச்சினை முடிவுக்கு வராது என்று தெரிகிறது.

மக்களவை தேர்தல்

அடுத்த தேர்தலில் பொதுக்குழுவின் பெரும்பான்மையை தேர்தல் ஆணையத்தில் சுட்டிக் காட்டி இரட்டை இலையை அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் மூலம் எடப்பாடி பழனிசாமி பெறக்கூடும். அதிமுகவிற்கான போராட்டம் மறுபுறம் நடந்து கொண்டே இருக்கும். இப்படியே இடியாப்ப சிக்கலாக இழுபறியாக செல்வதற்கு வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. டெல்லி முடிவு செய்யும் வரை அதிமுகவிற்கு விடிவு காலம் பிறக்காது என்பது தான் அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.