உதயநிதி – மோடி சந்திப்பு: டெல்லிக்கு ஸ்டாலின் சொல்லும் மெசேஜ் என்ன?

உதயநிதி ஸ்டாலின்
டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்களை இன்று சந்திக்கிறார். உதயநிதியின் இந்த சந்திப்பு குறித்து திமுக வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக பதவியேற்றதில் இருந்தே அந்த துறைக்கு தனி கவனம் கிடைக்கத் தொடங்கியது.

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து வாய்ப்புகளை வழங்குவதற்கான வேலைகளில் உதயநிதி ஈடுபட்டு வருகிறார்.

அண்மையில் ஒடிசாவில் நடைபெற்ற உலகக்கோப்பை ஹாக்கி தொடரை நேரில் பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசினார். ஒடிசாவில் உள்ள சர்வதேச அளவிலான விளையாட்டு அரங்குகள், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறு நகரங்களிலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்கள் பயிற்சிகள் மேற்கொள்ள வசதியாக விளையாட்டு அரங்குகள் கட்டுவதற்கான வேலைகளிலும் உதயநிதி கவனம் செலுத்தி வருகிறார்.

செஸ் ஒலிம்பியாட் போன்ற என்ற சர்வதேச செஸ் தொடரை முதன்முறையாக இந்தியாவில் நடத்தும் வாய்ப்பை தமிழ்நாடு பெற்றது. இதன்மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது தமிழ்நாடு. இதேபோல் தேசிய அளவிலான தொடர்கள், சர்வதேச விளையாட்டுத் தொடர்களை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூரிடம் உதயநிதி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

உதயநிதி அமைச்சரான பின்னர் அவருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் வசமிருந்த சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளதால் அனைத்து துறைகளில் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். இதனால் அனைத்து துறைகளிலும் ஆளுமை செலுத்தும் நபராக உள்ளார் உதயநிதி என்கிறார்கள்.

உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்று அமைச்சர்களே கூறி வருவதால் அவரது தலையீட்டை அவர்கள் வரவேற்கவே செய்கிறார்கள்.

தனக்கு அடுத்து தனது மகன் தான் என்பதை டெல்லியிலும் காட்டுவதற்காகவே ஸ்டாலின் உதயநிதியை பிரதமர் மோடியை சந்திக்க அனுப்பியுள்ளதாக சொல்கிறார்கள்.

‘எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மேலும் தாமதித்தால் உதயநிதி செங்கலுடன் மீண்டும் பிரச்சாரத்துக்கு கிளம்பிவிடுவார்’ என்று கிடைக்கும் இடங்களில் எல்லாம் தனது மகனை புரொமோட் செய்து வருகிறார் ஸ்டாலின். ஈரோடு இடைத் தேர்தல் பிரச்சாரத்திலும் உதயநிதியின் தேர்தல் பிரச்சாரத்தை குறிப்பிட்டு பேசினார் ஸ்டாலின்.

மக்கள் மத்தியில், அதிகாரிகள் மத்தியில், அமைச்சர்கள் மத்தியில் நம்பர் 2 உதயநிதி தான் என்பதை அடிக்கோடிட்டு வரும் ஸ்டாலின் டெல்லிக்கும் அதை தெரியப்படுத்தவே வாரிசை அனுப்பியுள்ளார் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.