டெல்லியில் மதுபானக்கொள்கையை உருவாக்கி அதை அமல்படுத்தியதில் ஊழல் நடந்திருப்பதாக பா.ஜ.க-வும், சி.பி.ஐ-யும் குற்றம்சாட்டின. ஏற்கெனவே இந்தப் புகார் தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் ஜெயின் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இதில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திவந்த சி.பி.ஐ நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மணீஷ் சிசோசியாவுக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து, நேற்று காலை சி.பி.ஐ அலுவலகத்துக்கு செல்லும்போதே, “நான் 7-8 மாதங்களுக்குச் சிறைக்குச் செல்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே சென்றார். தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். எனினும், மணீஷ் சிசோடியாவின் பதில் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி அவரைக் கைதுசெய்தனர்.
இது குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், “சிசோடியா ஓர் அப்பாவி. அவரின் கைது ஒரு மோசமான அரசியலாகும். சிசோடியா கைதால் மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். மக்கள் அனைத்தையும் புரிந்துகொள்வார்கள். மக்கள் இதற்கு பதில் கொடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில்,”பெரும்பாலான சிபிஐ அதிகாரிகள் மணீஷின் கைதுக்கு எதிராக இருந்தனர். அவர்கள் அனைவரும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர், அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் அவரைக் கைது செய்வதற்கான அரசியல் அழுத்தம் அதிகமாக இருந்ததால், அவர்கள் தங்கள் அரசியல் எஜமானர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது,” என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.