அமெரிக்காவில் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது – 5 பேர் பலி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டது. விமானத்தில் விமானி, டாக்டர், நர்சு, நோயாளி மற்றும் அவரது உறவினர் என மொத்தம் 5 பேர் இருந்தனர். ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது.

இதனையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிட்டன. சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மாயமான அந்த ஆம்புலன்ஸ் விமானம் ஸ்டேஜ்கோச் நகரில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மீட்பு குழுக்கள் அங்கு உடனடியாக விரைந்து சென்று பார்த்தபோது இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் அமெரிக்காவின் தேசிய விமான போக்குவரத்து ஆணையம் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே நெவாடாவில் தேசிய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்ட குளிர்கால புயல் எச்சரிக்கைக்கு மத்தியில் இந்த விமான விபத்து நடந்துள்ளதால் வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்ததா என்கிற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.