கனமழையினால் 20 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஏரி! தெப்பம் விட்டு வழிபட்ட மக்கள்!

ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை அடுத்த சாரண்டப்பள்ளி கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு முழுமையாக விளங்கி வரும் இந்த ஏரி கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது கனமழையால் நிரம்பி உள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த சாரண்டப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் பொது மக்கள் ஒன்று சேர்ந்து ஏரியில் தெப்பம் விட்டு திருவிழா கொண்டாடினர்.

முன்னதாக சாரண்டப்பள்ளி, காளேநட்டி ஆகிய கிராம மக்கள் மேள தாளங்களுடன் பூக்கரங்கங்களை ஊர்வலமாக கொண்டு வந்து சாரண்டப்பள்ளி பெரிய ஏரிக்கரையில் உள்ள வண்ணம்மா தேவி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் வண்ணமாதேவியை அமர வைத்து ஏரி முழுவதும் சுற்றி வந்தனர். அப்போது தெப்பம் ஏரியில் மூன்று முறை சுற்றி வந்தது. விவசாயம் செழிக்க வேண்டும் மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என அனைவரும் வேண்டி கொண்டனர்.

இந்த தெப்ப திருவிழாவில் சாரண்டப்பள்ளி, காளேனட்டி, நேரலட்டி, பாசப்பள்ளி, பள்ளப்பள்ளி, சென்னசந்திரம், மாயநாயகனப்பள்ளி, ஜோகட்டி, கக்கதாசம், மல்லசந்திரம், ஒசூர் அக்ரஹாரம், சாத்தி நாயகனப்பள்ளி, தேவர் உலிமங்கலம், பிபி.பாளையம், தாரவேந்திரம், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தெப்ப விழாவை கண்டு ரசித்தனர். அனைவருக்கும் ஆடு கோழி பலியிட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.