தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக திருமதி குஷ்பு சுந்தர் நியமனமும் பின்னணியும்

நியூடெல்லி: இந்திய அரசின் சட்டபூர்வமான அமைப்பான தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக திருமதி  குஷ்பு சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். 1992ம் ஆண்டு முதல் இயங்கிவரும் தேசிய மகளிர் ஆணையம், மகளிர் நலன் தொடர்பான கொள்கைகளை உருவாக்கி, அவற்றை இந்திய அரசுக்கு பரிந்துரைக்கும் அமைப்பு ஆகும்.  தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக திருமதி  குஷ்பு சுந்தர் நியமிக்கப்பட்டதற்கு அவர், டிவிட்டரில் அனைவருக்கும், குறிப்பாக பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அரசியல், சமயம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மகளிர்க்கான உரிமைகளைக் காத்திடவும், வரதட்சணை, வன்கொடுமை, பணிச் சுரண்டல், காவல் நிலையக் கொடுமைகள் என பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women(NCW) ஆகும்.

மகளிர் உரிமைகளுக்கான இராஷ்டிர மகளிர் (Rashtra Mahila) எனும் மாதாந்திர செய்தி பத்திரிக்கையை, ஆங்கிலம், இந்தி என இரு மொழிகளில் தேசிய மகளிர் ஆணையம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகை குஷ்பு சுந்தர், தற்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். இன்றும், ரசிகர்களால் போற்றப்படும் நடிகையாக வலம் வரும் குஷ்புவுக்கு ரசிகர்கள் கோயில் கட்டியதும் நினைவில் இருக்கலாம்.

பன்முக கலைஞர்

சினிமாத் துறையில், நடிகையாக அறிமுகமாகி, திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொண்ட திருமதி குஷ்பூ சுந்தர் அரசியலில் இணைந்து சேவையாற்றி வருகிறார். 

 
2010ம் ஆண்டில் திமுக,  2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் என இரு கட்சிகளில் இருந்த குஷ்பூ, பாஜகவில் இணைந்தார். 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் அவருக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டதற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

அரசியலில் தைரியமான செயல்பாடுகள்

 பெரியார் சிலை உடைப்பு, காவி பூசுதல் என எந்த விஷயம் நடந்தாலும் குரல் கொடுக்கும் குஷ்புவுக்கு இன்று தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பெண்களுக்கு உரிமை மற்றும் பாதுகாப்பு
இந்த அறிவிப்பு வெளியானதும், அதை டிவிட்டரில் பகிர்ந்துக் கொண்ட குஷ்பூ, பெண்கள் யாரும் பயப்பட வேண்டாம். நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் போராடுவோம். ஒரு காலத்தில், தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்த குஷ்பு, இன்று அந்த ஆணையத்தின் உறுப்பினராகவே நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது அவரின் தைரியத்திற்கும், அவர் ஏற்படுத்தியிருக்கும் நம்பிக்கைக்குமான பரிசு என பாராட்டுகள் வந்து குவிகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.