தென் தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் திட்டம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. இதற்கு கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்குவதில் தொடர்ந்து கால தாமதமாகி வருகிறது. ஏனெனில் நிதி ஒதுக்கீடு என்பது பெரிதாக நடக்கவில்லை. மொத்தம் 1977.8 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் பணிகள்
வரும் அக்டோபர் 2026க்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுச்சுவரை தவிர வேறெந்த பணிகளும் நடக்கவில்லை எனத் தெரிகிறது. இந்த விஷயத்தில் மதுரையை சேர்ந்த மக்களவை எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கின்றனர்.
பட்ஜெட்டில் அறிவிப்பு
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லை. இது தமிழ்நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
ஆர்.டி.ஐ மூலம் கேள்வி
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரவி குமார் என்ற நபர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) மூலம் நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கான பதில் கிடைத்துள்ள நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாட்டிலேயே மிகவும் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.
RTI about Madurai AIIMS
மொத்தம் 7 எய்ம்ஸ்
அதாவது, 12.35 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுமானப் பணியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவை கவுகாத்தி (அசாம்), விஜய்பூர் (ஜம்மு), அவந்திபோரா (காஷ்மீர்), தியோகர் (ஜார்க்கண்ட்), ராஜ்கோட் (குஜராத்), பிபி நகர் (தெலங்கானா), மதுரை (தமிழ்நாடு) ஆகியவை ஆகும். இதில் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு கால வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவமனைமதிப்பீடு (கோடி ரூபாய்)நிதி விடுவிப்புநிறைவடையும் தேதிகவுகாத்தி எய்ம்ஸ்1,123717.52மே 2023விஜய்பூர் எய்ம்ஸ்16611100.78செப்டம்பர் 2023அவந்திபோரா எய்ம்ஸ்1828713.67செப்டம்பர் 2025தியோகர் எய்ம்ஸ்1103793.86மார்ச் 2023ராஜ்கோட் எய்ம்ஸ்1195622.80அக்டோபர் 2023பிபி நகர் எய்ம்ஸ்1365.95156.01அக்டோபர் 2024மதுரை எய்ம்ஸ்1977.812.35அக்டோபர் 2026
இதுதவிர தர்பங்கா (பிகார்), மனேதி (ஹரியானா) ஆகிய நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மேற்குறிப்பிட்ட 7 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மதுரையில் மட்டும் பணிகளே தொடங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இப்படியே போனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் முடித்து விடுவார்களா என்ற கேள்வி எழுகிறது.
நாராயணன் திருப்பதி பேட்டி
இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் ’சமயம் தமிழ்’ சார்பில் கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், தேவையற்ற சர்ச்சையை சில அரசியல் கட்சிகள் கிளப்பி வருகின்றன. ஆர்.டி.ஐயில் தெரிவிக்கப்பட்டிருப்பது செலவிடப்பட்ட தொகை.
நிதி தயாராக உள்ளது
ஒதுக்கப்பட்டது 1,977.8 கோடி ரூபாய். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஜப்பானிய நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. எனவே இதற்கான நிதி எப்போதுமே தயாராக இருக்கிறது. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றனர்.
மாநில உரிமைகள் என்ற பெயரில் மலிவான அரசியல் செய்கின்றனர். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ இடங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இதை மறந்துவிட வேண்டாம். எனவே மத்திய அரசு மீது மோசடி அரசியலை செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் எனக் கூறினார்.