ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் மதியம் 1 மணி வரை 44.56% வாக்குப் பதிவாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்.27) காலை 7 மணிக்கு தொடங்கியது. கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இத்தேர்தலில் வாக்களிக்க 2.27 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
முன்னதாக காலை 11 மணி வரை 27.89 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் தற்போது மதிய 1 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி மதியம் 1 மணி வரை 55.56% வாக்குப் பதிவாகி உள்ளது. இதன்படி கடந்த 4 மணி நேரத்தில் 49,740 ஆண்கள் மற்றும் 51,649 பெண்கள் என்று மொத்தம் 1.01 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையாற்றியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பணப்பட்டுவாடா புகார்: இதற்கிடையில் திமுக கூட்டணி சார்பில் அன்னை சத்யா நகரில் வாக்காளர்களுக்கு ரூ.4 ஆயிரம் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வேறு இரு 2 வாக்குச்சாவடிகள் அருகே பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை இந்தப் புகாரை அளித்திருந்தார். அதில், அசோகபுரத்தில் உள்ள 138 மற்றும் 139 வது வாக்குச்சாவடிகளில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக இன்பதுரை புகார் அனுப்பியிருந்தார்.
டோக்கனுக்கு காசா?. தேர்தலுக்கு முன்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடுகள் தோறும், வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, திமுக சார்பில் ஒரு வாக்கிற்கு ரூ 3000-ம் வழங்கப்பட்டது. அதோடு, குக்கர், ஸ்மார்ட் வாட்ச், வெள்ளி டம்ளர், ஹாட் பேக், வீட்டு உபயோகப் பொருட்கள், வேட்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. அதிமுக சார்பில் ஒரு வாக்கிற்கு ரூ 2000-ம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, அகல்விளக்கு, வெள்ளி டம்ளர், பேண்ட், சட்டை உள்ளிட்ட பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டன.
திமுக சார்பில் இரண்டு வாக்கிற்கு மேல் உள்ள வீடுகளுக்கு ஒரு டோக்கன் வழங்கப்பட்டது. இதற்கான சிறப்பு பரிசு வாக்குப்பதிவு நாளன்று வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே இன்று சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு ரூ.4000 வரை வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.