உலக டேபிள் டென்னிஸ் போட்டி கோவாவில் இன்று தொடக்கம்

கோவா,

உலக டேபிள் டென்னிஸ் ‘ஸ்டார் கன்டென்டர்’ சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 5-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஒலிம்பிக் சாம்பியன்கள் சீனாவின் மா லாங், சென் மெங் மற்றும் இந்தியாவின் சரத் கமல், சத்யன், மணிகா பரத்ரா, ஸ்ரீஜா அகுலா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான சீனாவின் பேன் ஜெங்டோங், பெண்கள் பிரிவின் உலகச் சாம்பியன் வாங் மன்யு, ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சன் யிங் ஷா (சீனா), தோமோகாஜூ ஹரிமோட்டோ (ஜப்பான்), லின் யுன் ஜூ (சீனதைபே), டார்கோ ஜோர்ஜிக் (சுலோவேனியா) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

டேபிள் டென்னிசில் இந்தியாவில் நடக்க உள்ள மிகப்பெரிய தொடர் இது தான். உலகம் முழுவதும் உள்ள நட்சத்திரங்கள் படையெடுப்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் இரு நாட்கள் தகுதி சுற்று நடைபெறும். 1-ந்தேதியில் இருந்து பிரதான சுற்று ஆரம்பிக்கும்.

இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சத்யன் கூறுகையில், ‘நம்ப முடியாத அளவுக்கு களம் வலுவாக இருப்பதால் ஒவ்வொரு ஆட்டமும் கடினமாக இருக்கப்போகிறது. நிறைய ரசிகர்கள் கோவாவுக்கு வருகை தந்து எங்களை உற்சாகப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

தேசிய சாம்பியனான ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீஜா அகுலா கூறுகையில், ‘நான் விளையாடியதில் இது தான் நிச்சயம் மிகவும் வலுவான ஒற்றையர் பிரிவாக இருக்கும். இதற்கான பயிற்சி நல்ல விதமாக சென்று கொண்டிருக்கிறது. நெருக்கடியை தவிர்த்து ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்துவேன். கால்இறுதிக்கு முன்னேறுவதே எனது இலக்கு’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.