அண்ணாமலைக்கு புதிய நெருக்கடி: எடப்பாடிக்கு எதிராக மீண்டும் களமிறக்கப்படுவாரா ஓபிஎஸ்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு பக்கம் என்றால் அதிமுக பொதுக்குழு வழக்கில் வெளியான தீர்ப்பு ஒரு புறம் என தமிழ்நாட்டு அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சுற்றுகிறது.

அதிமுக பொதுக்குழு தீர்ப்பை பொறுத்தவரை
எடப்பாடி பழனிசாமி
வசம் கட்சி வந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி பதவியேற்க வாய்ப்புள்ளது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம் பாஜகவில் சில தாக்கங்களை ஏற்படுத்துவதாக சொல்கிறார்கள். ஜெயலலிதா உயிரிழந்ததிலிருந்தே அதிமுகவில் நடைபெறும் முக்கிய மாற்றங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாஜகவின் கை இருந்துள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் கைகளை ஆளுநர் இணைத்து வைத்ததே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது. டெல்லிக்கு எப்போதும் விசுவாசத்தை காட்டி வந்த ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததற்கு பாஜக அவருக்கு வாழ்த்து சொல்லவில்லை. இதுகுறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைகின்றன.

“தமிழ்நாடு பாஜகவுக்கு அண்ணாமலை தலைவராக வந்ததிலிருந்தே ஓபிஎஸ்ஸின் வாய்ஸ் டெல்லியில் எடுபடுவது குறைந்து விட்டதாக சொல்கிறார்கள். ஆடிட்டர் மூலம் ஓபிஎஸ் காய் நகர்த்தியது பலன் இல்லாமல் போனது. டெல்லியும் அண்ணாமலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. அதிமுக நிர்வாகிகள் பெருமளவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிப்பதாலும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அண்ணாமலை எப்போதும் எடப்பாடியை தனக்கான ஆதரவு சக்தியாகவே பார்த்து வந்தார்.

தற்போது அதிமுகவின் அதிகாரம் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு சென்ற பின்னர் தான் ஒரு விஷயம் அவருக்கு உரைக்கத் தொடங்கியுள்ளது என்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் ஏற்கெனவே தனது செல்வாக்கை நிரூபித்த எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தீர்ப்பு மேலும் பலம் சேர்த்துள்ளது. அதிமுக என்ற பெரிய கட்சியின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ளதால் அந்த பகுதியில் வேறொரு தலைவருக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதில் சிக்கல் எழும். இதனால் அண்ணாமலைக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதனால் ஓபிஎஸ்ஸை எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பயன்படுத்தலாம் என்பதற்காகவே தீர்ப்பு வெளியானதும் பாஜக சார்பாக எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்கிறார்கள். தற்சமயம் எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி கிடைத்தாலும் பாஜக இனி தான் தன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் என்று கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.