மத்திய பாஜக அரசு ராணுவத்தில் அக்னிபத் என்ற திட்டத்தை புதிதாக கொண்டு வந்தது. முப்படைகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் குறுகிய கால சேவைக்கு வீரா்களைத் தோ்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஜூன் 14-இல் அறிவித்தது. 17½ வயது முதல் 23 வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை செயல்படுத்தியது.
அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்திலும், மாநில உயா்நீதிமன்றங்களிலும் பொதுநல மனுக்கள் தொடரப்பட்டன. இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு அனைத்து வழக்குகளையும் தில்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தொடர்ப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. தேச நலனுக்காகவும், பாதுகாப்பு படையை மேம்படுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றம் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.