மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மம்தா குமாரி, தெலினா காங்டுப், குஷ்பு சுந்தர் ஆகிய மூவரும் தேசிய பெண்கள் ஆணையத்தின் (NCW) உறுப்பினர்களாக நியமிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. இவர்கள் மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது வரை அல்லது மறு உத்தரவு வரை பதவியில் நீடிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர்
இதன்மூலம் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல நடிகையுமான குஷ்பு தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, என் மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பொறுப்பை வழங்கிய பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு மிக்க நன்றி.
பிரதமர் மோடிக்கு நன்றி
உங்களின் தலைமையின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உரிமைகளை பெற்று தரவும் கடின உழைப்பை செலுத்துவேன். இந்த பதவியில் என்னுடைய பணிகளை தொடங்க மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன். ஜெய்ஹிந்த் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில், குஷ்புவிற்கு பாஜக சார்பில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறோம்.
அண்ணாமலை பாராட்டு
இது அவருடைய இடைவிடாத அர்ப்பணிப்பு மற்றும் பெண்கள் உரிமைக்கான போராட்டம் ஆகியவற்றுக்காக கிடைத்த அங்கீகாரம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு, மிக்க நன்றி ஜி. உங்கள் ஒத்துழைப்பும், ஆதரவும் எனக்கு எப்போதும் உந்துதலாக இருக்கும் என்று குஷ்பு பதில் ட்வீட் போட்டுள்ளார். 1980ல் திரையுலக வாழ்வை தொடங்கிய குஷ்பு, 2010ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
அரசியல் பாதை
அதன்பிறகு காங்கிரஸ், பாஜக என கட்சி மாறினார். 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பாஜக உறுப்பினராக இருந்து வருகிறார். இதற்கிடையில் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் திமுக வேட்பாளர் எழிலனிடம் தோல்வியை தழுவினார். அப்போது 28.99 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
குஷ்புவின் தேசிய செல்வாக்கு
தற்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். டெல்லியில் பாஜக தலைமையிடம் செல்வாக்கு பெற்ற நபராக விளங்கி வருகிறார். அவ்வப்போது தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து தேசிய தலைமைக்கு விவரிப்பார்.
பெண்களுக்கான குரல்
பெண்களின் உரிமைக்காக, பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். குறிப்பாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த பில்கிஸ் பானு வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் குஷ்புவிற்கு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.