புதுடெல்லி: உலகின் தொலைதூரம் பயணிக்கும் ‘கங்கா விலாஸ்’ எனும் சொகுசுக் கப்பலை கடந்த ஜனவரி 13ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதன் பெயரை மாற்ற வலியுறுத்தி, அகில இந்திய இந்து மகாசபா உத்தரப்பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.
தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த சொகுசுக் கப்பல், வாரணாசியிலிருந்து வங்கதேசம் வழியாக அசாமின் திப்ருகருக்கு விடப்பட்டுள்ளது. ஐந்து நட்சத்திர அந்தஸ்தில் கட்டமைக்கப்பட்ட இக் கப்பல், அண்டை நாடனான வங்கதேசத்திலும் நுழைந்து செல்கிறது. சுமார் 4,000 கி.மீ தொலைவை 52 நாட்கள் பயணிக்கும் இதனுள், அனைத்து வகை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 13ல் வாரணாசியிலிருந்து கிளம்பிய இந்த கப்பல், மார்ச் 1ல் திப்ருகர் அடைய உள்ளது.
இந்நிலையில், இந்துத்துவா அமைப்புகளில் ஒன்றான அகில இந்திய மகாசபா, அக்கப்பலின் பெயரிலுள்ள கங்கா எனும் பெயரை அகற்ற வலியுறுத்தி உள்ளது. இத்துடன் மேலும் சில நிபந்தனைகளையும் இந்த அமைப்பின் இளைஞர் பிரிவின் தேசியத் தலைவர் அருண் பாதக் விதித்துள்ளார். அதில் அகில இந்திய மகாசபாவின் இளைஞர் பிரிவின் தலைவர் அருண் பாதக், ‘சொகுசுக் கப்பலில் நவீன குளியலறை மற்றும் ஸ்பா எனும் மசாஜ் அறைகளும் உள்ளன. இது, புனித நதியான எங்கள் தாய் கங்கையை அவமதிப்பது ஆகும். எனவே, இவற்றை அகற்றி அக்கப்பலில் அன்றாடம் கங்கா ஆர்த்தி பூஜை நடத்தப்பட வேண்டும். ஏனெனில், கங்கை என்பது கோடான கோடி மக்களின் ஆன்மிக நம்பிக்கை கொண்டது.’ எனத் தெரிவித்துள்ளார்.
இதுபோல், மொத்தம் ஐந்து நிபந்தனைகள் விதித்துள்ள அருண் பாதக், அதன் உரிமையாளருக்கு 15 நாள் காலக்கெடு அளித்துள்ளார். அதற்குள், இவற்றை சரிசெய்யவில்லை எனில், உ.பி.யின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் எச்சரித்துள்ளார். இதற்காக, உ.பி.யின் உயர் நீதிமன்றத்தில் கங்கா விலாஸின் உரிமையாளரான ராஜ் சிங் உள்ளிட்ட மூவர் மீது அருண் பாதக் மனு அளித்துள்ளார். இந்த தகவல்களுடனான ஒரு கடிதம், கங்கா விலாஸ் நிறுவனத்திற்கும் அகில இந்திய இந்து மகாசபாவால் அனுப்பப்பட்டுள்ளது.