வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பல சிபிஐ அதிகாரிகள் டில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுபான விற்பனை கொள்கையில் நடந்துள்ள மோசடி தொடர்பாக, புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை, எட்டு மணி நேர விசாரணைக்குப் பின், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று(பிப்.,26) அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கை: பெரும்பாலான சிபிஐ அதிகாரிகள் மணீஷின் கைதுக்கு எதிராக இருந்ததாக என்னிடம் கூறப்பட்டது. அந்த அதிகாரிகள் மணீஷ் சிசோடியா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை.
ஆனாலும் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்ற அரசியல் அழுத்தம் மட்டும் அதிகம் இருந்தது. அவரை கைது செய்ய வேண்டும் அவர்கள் தங்களின் அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் கீழ்படிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் மணீஷ் சிசோடியாவை கைது செய்து சி.பி.ஐ., அதிகாரிகள் பணிந்து போய் விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ஜ., பதிலடி:
இது குறித்து பா.ஜ., எம்பி மனோஜ் திவாரி வெளியிட்ட அறிக்கை: குஜராத் தேர்தலின்போது உளவுத்துறை குறித்து இதுபோன்ற போலிச்செய்திகளை பரப்பியதாகவும், இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இப்போது நீங்கள் சொல்வதும் எழுதுவதும் கட்டுக்கதை என்பது அனைவரும் அறிந்தததே. சட்டம் அதன் பணியைச் செய்யட்டும்.
மது அமைச்சரின் மது ஊழல் மீதான விசாரணை இனி சூடுபிடிக்கும். இதுவும் உங்களுக்கு பயம்தானே. மதுபான அமைச்சரின் மதுபான ஊழல் குறித்த விசாரணை எங்கும் பரவட்டும். என பதிலடி கொடுத்துள்ளார்.
போராட்டம்:
டில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, டில்லியில் பல்வேறு இடங்களில் ஆம்ஆத்மியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் களத்தில் இறங்கினர். இதனால் சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கு
மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்த நிலையில், அவரை இன்று கோர்ட்டின் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது சிசோடியாவை 5 நாட்கள் காவலில் எடுக்க கோர்ட்டில் சிபிஐ அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். சிபிஐ.,யின் கோரிக்கையை ஏற்று மார்ச் 4 வரை (5 நாட்கள்) காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement