கீவ்: உக்ரைன் கூட்டுப் படைகளின் கமாண்டர் எட்வர்ட் மைக்கைலோவிச் மொஸ்கலோவ் என்பவரை அதிரடியாக நீக்கி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். ஆனால், நீக்கத்துக்கான காரணம் எதையும் வர் தெரிவிக்கவில்லை.
ரஷ்யா – உக்ரைன் போர் தொடக்கியபோது கடந்த ஆண்டு மார்ச் மாதம் உக்ரைன் ராணுவ கூட்டுப் படையின் கமாண்டராக எட்வர்ட் மைக்கைலோவிச் மொஸ்கலோவ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் கடந்த சில மாதங்களாகவே உயரதிகாரிகளை தொடர்ந்து பணி நீக்கம் செய்து வந்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அந்த வகையில் மொஸ்கலோவ்வும் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் உக்ரைனுக்கு பயணம் செய்த சவுதி வெளியுறவுத் துறை ஃபர்கான் அல் சவுத் சுமார் 400 மில்லியன் டாலர் உக்ரைனுக்கு நிவாரண உதவியாக வழங்கினார். சவுதி – உக்ரைன் இடையேயான உறவில் இது மிக முக்கிய நகர்வு என்றும், உண்மையான உதவியை சவுதி செய்துள்ளது என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தங்களுக்கு மேற்கத்திய நாடுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் உக்ரைனின் வெற்றி தவிர்க்க முடியாதது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னணி: கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை எட்டியுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.