ஆஸ்தான சின்னத்திரை நட்சத்திரங்கள் நடிப்பில், ஹங்கமா ஓடிடி தளம் தயாரித்துள்ள முதல் நேரடி தமிழ் வெப் தொடரான ‘மாய தோட்டா’ நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனக்குப் பிடித்தமான சின்னத்திரை நட்சத்திரங்களை தொலைக்காட்சியை தாண்டி, பெரிய திரையில் பார்க்கும்பொழுது அவர்களின் வளர்ச்சியை தங்களது வளர்ச்சியாகவே ரசிகர்கள் பார்ப்பது வழக்கம். அதுவும், கொரோனாவுக்குப் பிறகு, சின்னத்திரை, பெரிய திரை என்பதையும் தாண்டி ஓடிடி தளங்கள் தான் மக்களை அதிகம் கவர்ந்து வருகின்றன. அதிலும் மிகப்பெரிய ஓடிடி தளங்களில் தங்களுக்குப் பிடித்த திரை நட்சத்திரங்களின் படங்களோ அல்லது வெப் தொடரோ வெளியானால், சொல்லவே வேண்டாம்… ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாகவே அமையும்.
அந்தவகையில், இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனமான ஹங்கமா ஓடிடி தளம், தனது முதல் நேரடி தமிழ் தயாரிப்பான ‘மாய தோட்டா’ என்ற வெப் சீரிஸை நாளை வெளியிடுகிறது. ஆக்ஷன் – த்ரில்லருடன் உருவாகியுள்ள ‘மாய தோட்டா’ வெப் தொடர் மொத்தம் 6 எபிசோட்டுகளை கொண்டுள்ளதாம். இந்தத் தொடரில் சின்னத்திரை பிரபலங்களான சைத்ரா ரெட்டி, அமித் பார்க்கவ், குமரன் தங்கராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதில் உயர்மட்ட வழக்கு ஒன்றை விசாரித்து, உண்மையான குற்றவாளியை கண்டுப்பிடிப்பதற்காக எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை சமாளிக்கும் துணைக் கமிஷனர் (DCP) ரஞ்சன் கதாபாத்திரத்தில் அமித் பார்க்கவ் நடித்துள்ளார். எதிர்பாராத முடிவையும், திருப்பத்தையும் அளிக்கும் வகையில் சஸ்பென்ஸ் – ஆக்ஷன் காட்சிகளுடன் ஒவ்வொரு எபிசோடும் உருவாக்கப்பட்டுள்ளதாம் ‘மாய தோட்டா’ வெப் தொடர். நந்தகுமார் ராஜு இதை இயக்கியுள்ளார்.
ஹங்கமாவுடன் இணைந்து மது அலெக்ஸாண்டர் மற்றும் பிரபு ஆண்டனி இந்த சீரிஸை தயாரித்துள்ளனர். ‘மாய தோட்டா’ வெப் தொடரின் க்ளைமேக்ஸ் காட்சிகள், பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் நுனிக்கே அழைத்துச் செல்லும் வகையில் உருவாகி இருப்பதாக இந்தத் தொடரில் நடித்துள்ள நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.