டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா நேற்று விசாரணைக்காக சிபிஐ முன் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து 8 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை அளிக்காததால் நேற்று மாலை கைது செய்தனர். மணீஷ் சிசோடியாவின் கைதுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இன்று நாடு முழுவதும் மணீஷ் சிசோடியா கைதை கண்டித்து ஆம்ஆத்மி கட்சி ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது. இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்தது. பின்னர் வழக்கு விசாரணைக்கு வந்த போது விசாரணையின் போது எழுப்பிய கேள்விகளுக்கு மணீஷ் சிசோடியா மழுப்பலாக பதிலளித்தாக சிபிஐ தரப்பு வாதம் தெரிவித்தது. மணீஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என சிசோடியா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி நீதிமன்றம், மார்ச் 4 வரை சிசோடியாவை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது. மணீஷ் சிசோடியாவை மார்ச் 4ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.