விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில், சேர்க்கபட்டிருந்த ஆதரவற்றரோர்கள் காணாமல் போனது தொடர்பாகவும், பாலியல் துன்புறத்தல் தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த இல்லத்தில் சேர்க்கபட்டிருந்த, திருப்பூரை சேர்ந்த சபீருல்லாவை காணவில்லை எனக்கோரி, அவரை மீட்டு தர வேண்டும் என, அமெரிக்காவில் உள்ள அவரது உறவினர் சலீம்கான் என்பவரின் நண்பர் ஹலிதீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சுந்தர் மற்றும் நிர்மல்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சபீருல்லா காணாமல் போன வழக்கு தொடர்பாக சிபிசிஐடியின் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அதில், அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்கபட்ட சபீருல்லா, பெங்களூருவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கபட்டதாகவும், அங்கிருந்து அவர், தப்பியதாகவும், விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், பெங்களூருவில் உள்ள பத்ராவதி, என்னுமிடத்தில் உள்ள மசூதியின் முன் கண்டெடுக்கப்பட்ட முதியவர் ஒருவரின் சடலம், சபீருல்லா கானின் அடையாளங்களுடன் ஒத்துபோவதாகவும், அந்த உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சபீருல்லாவின் புகைப்பட ஆதாரங்கள் உள்ளதால், சலீம் கான் நேரில் வந்து அடையாளம் காட்டவேண்டும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கபட்டிருந்தது.
இதையடுத்து, சலீம் கான் நேரில் வந்து அடையாளம் காட்டுவது தொடர்பாக விளக்கமளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
மேலும், ஆசிரமத்தைச் சேர்ந்த எட்டு பேர் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்கப்படுவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.