இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலார் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினில் நெல்லை, தூத்துக்குடி ஒன்றியங்களில் “ஒன்றியத்தின் நிதிநிலைமையை கருத்தில் கொண்டும், விற்பனை விலையை உயர்த்தும் பொருட்டும், ஒன்றிய நலனை முன்னிட்டும்” என்கிற மூன்று காரணங்களோடு நாளை மறுதினம் (மார்ச் 1ம் தேதி) முதல் பச்சை நிற பாக்கெட்டில் வரும் நிலைப்படுத்தப்பட்ட பாலில் 1% கொழுப்பு சத்து அளவை (அதாவது 4.5% கொழுப்பு சத்தினை 3.5% ஆக) குறைத்து, அதே பச்சை நிற பாக்கெட்டில் “Cow Milk” என்கிற பெயரில் அமுல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் வரை மறைமுக விற்பனை விலையை உயர்த்தி பொதுமக்கள் தலையில் பாரத்தை சுமத்தி, அதன் மூலம் ஆதாயம் அடைய நினைக்கும் நெல்லை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் (ஆவின்) செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, விஞ்ஞான ரீதியாக மக்களை ஏமாற்றும் இந்த நடவடிக்கையை ஆவின் நிர்வாகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
அல்லது 1%கொழுப்பு சத்து தற்போதைய விலை நிலவரப்படி 7ரூபாய் 50காசுகள் என்பதால், தற்போது அறிவித்துள்ள Cow Milk விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.
ஏற்கனவே கோவை மாவட்ட ஒன்றியத்தில் “நிர்வாக காரணங்களுக்காக..!” எனக் கூறி கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட்டில் வரும் நிலைப்படுத்தப்பட்ட பாலில் 1% கொழுப்பு சத்து அளவை (அதாவது 4.5% கொழுப்பு சத்தினை 3.5% ஆக) குறைத்து, அதே விற்பனை விலையில், அதே பச்சை நிற பாக்கெட்டில் “Cow Milk” என்கிற பெயரில் கண்ணுக்கு தெரியாத வகையில் அச்சிட்டு விஞ்ஞான ரீதியாக மக்களை ஏமாற்றும் செயலை கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம் அமுல்படுத்தியது.
ஆனால் கொழுப்பு சத்து அளவு குறைக்கப்பட்ட பாலின் விற்பனை விலையை குறைக்காத சூழலில், கோவை மாவட்ட மக்கள் பசும் பால் வேண்டும் என கோரிக்கை விடுத்ததால் தான் அவ்வாறு செயல்படுத்தியதாக ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் தெரிவித்திருந்தது, ஆவின் பாலில் கொழுப்பு சத்து அளவை குறைத்து, எங்களுக்கு மறைமுகமாக லிட்டருக்கு 7 ரூபாய் வரை விற்பனை விலையை உயர்த்துங்கள் என பொதுமக்களே கோரிக்கை வைத்தனர் என்கிற ரீதியில் ஆவின் நிர்வாக இயக்குனர் தெரிவித்திருந்தது நகைப்பிற்குரியதாகும்.
மேலும் பால் கொள்முதலில் பசு, எருமைப்பால் தனித்தனியாக தரம் பார்த்து கொள்முதல் செய்யப்பட்டாலும் கூட BMC, MCC நிலையங்களில் அவை ஒரே கொள்கலனில் சேமிக்கப்பட்டு ஒரே பாலாக (Mixed Milk) மட்டுமே டேங்கர் லாரிகள் மூலம் ஆவின் பால் பண்ணைகளுக்கு கொண்டு வரப்படும் நிலையில், அதில் இருந்து பசும் பாலினை எப்படி தனியாக பிரித்தெடுக்க முடியும்..? அப்படியானால் நிலைப்படுத்தப்பட்ட பாலில் 1% கொழுப்பு சத்து அளவை குறைத்து விட்டு அதற்கு பசும் பால் என பெயரிட்டு அழைப்பது மக்களை திட்டமிட்டு ஏமாற்றும் செயலன்றி வேறென்னவாக இருக்க முடியும்..?
திமுக அரசு பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே ஆவின் நிர்வாகம் தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக பால் கொள்முதலை குறைக்கத் தொடங்கியதாலும், பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், பால்வள ஆணையர், மாவட்ட துணைப் பதிவாளர்கள் என பால்வளத்துறையை சேர்ந்த ஒட்டுமொத்த அதிகாரிகளும் பால் கூட்டுறவு சங்கங்களை தீவிரமாக கண்காணிக்க தவறியதாலும், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான தொகையை குறித்த காலத்தில் பட்டுவாடா செய்யாததாலும் ஆவினுக்கான பால் வரத்து கடந்த ஓராண்டு காலமாக கடுமையாக குறைந்து கொண்டே போனதன் விளைவு தான் தற்போது தமிழகம் முழுவதும் நிலவும் ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கு காரணமாகும்.
அதுமட்டுமின்றி கொரோனா காலகட்டத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பல முடங்கிய நிலையில் ஆவினுக்கு அபரிதமாக பால் வழங்கிய பால் உற்பத்தியாளர்களை பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தக்க வைத்துக் கொள்ள தவறியதும், அந்த காலகட்டங்களில் தொடங்கி சிறப்பான முறையில் பால் கொள்முதல் நடைபெற்று, உற்பத்தி செய்து கைவசமிருந்த பால் பவுடர் (SMP), வெண்ணெய் உள்ளிட்டவற்றை கொரோனாவிற்கு பிறகான காலகட்டத்தில் தொலைநோக்கு சிந்தனை இல்லாமல் தனியாருக்கு தாரளாமாக விற்பனை செய்து விட்டதால் ஆவினில் நிலைப்படுத்தப்பட்ட (பச்சை நிற பால் பாக்கெட்) மற்றும் நிறைகொழுப்பு (ஆரஞ்சு நிற பால் பாக்கெட்) பால் உற்பத்தி தடைபட்டு, கடந்த சில வாரங்களாகவே தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகமானது கடுமையாக பாதிக்கப்பட்டு, பால் முகவர்களும், பொதுமக்களும் நித்தமும் அவதியடைந்து வருகின்றனர்.
பால் கொள்முதல் குறைந்து போனதால் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி, விற்பனை அதிகளவில் பாதிக்கப்பட்டு, பல்வேறு ஒன்றியங்கள் வருவாய் இழப்பை சந்திக்க தொடங்கியதால் நவீன யுகத்தின் விஞ்ஞான முறையில் ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தி, தங்களின் இழப்பை ஈடுசெய்ய நினைக்கும் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
ஆவின் நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) விற்பனை விலையை கடுமையாக உயர்த்தி அந்த பாலினை மக்களாகவே புறக்கணிக்கச் செய்து, அதை விட அதிக விற்பனை விலை கொண்ட டீமேட் (Tea Mate) பாலினை வாங்க பால் முகவர்களை நிர்ப்பந்தம் செய்ததோடு, நிலைப்படுத்தப்பட்ட பாலில் (Standardized Milk) சத்தினை குறைத்து, சத்து குறைவான பசும்பாலினை (Cow Milk) அதே விற்பனை விலைக்கு வாங்க வேண்டும் என நுகர்வோரை கட்டாயப்படுத்துவது என ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஒரு பாலினை அழித்து புதிய வகை பாலினை அறிமுகம் செய்யும் அதிமேதாவி அதிகாரிகளால் 2006-2011 காலகட்ட திமுக ஆட்சியில் இருந்த 25லட்சம் லிட்டர் பால் கொள்முதல், 21.5லட்சம் லிட்டர் விற்பனை என்கிற வீழ்ச்சி நிலையை நோக்கி ஆவின் நிர்வாகம் சென்று விடும் போலிருக்கிறது.
காஞ்சிபுரம் – கேட்டது ஒன்னு ; கொடுத்தது ஒன்னு இருளர் இன மக்கள் புலம்பல்
ஆவினிலும், பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறையில் நிர்வாகத் திறனற்ற, ஊழல் செய்வதில் வல்லவர்கள் அதிகாரிகளாக இருக்கும் வரை, அவ்வாறானவர்கள் மீது சாட்டையை சுழற்றத் தவறி அவர்களுக்கு துணை செல்பவர் துறை சார்ந்த அமைச்சராக இருக்கும் வரை ஆவினுக்கு வளர்ச்சி என்பதை விட, வீழ்ச்சியே அதிகமாக இருக்கும்.
எனவே அதுபோன்றவர்களை அரசு உடனடியாக களையெடுக்காத வரை ஆவினுக்கு விடியலும், வளர்ச்சியும் எட்டாக்கனி தான் என்பதை தமிழக முதல்வர் அவர்கள் உணர்ந்து இனியாவது உரிய நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.