நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், ராதாபுரம், வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சாதிச் சான்றிதழ் கேட்டுப் பல வருடங்களாக அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து வருகிறார்கள். ஆனால், அவர்களின் மனுக்களை பரிசீலிக்காமலே அதிகாரிகள் தள்ளுபடி செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி கிராமத்தின் ஜே.ஜே.நகரில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த இசக்கி என்பவரின் மகள் காளீஸ்வரி, தனக்குச் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறார். அதில், தன்னுடைய அண்ணன், உறவினர்களுக்கு சாதிச் சான்று கொடுத்த அதிகாரிகள், தனக்கு மட்டும் கொடுக்க மறுப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
மனு அளிப்பதற்காக தாயுடன் வந்திருந்த காளீஸ்வரி நம்மிடம் பேசுகையில், ”நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே சாதிச் சான்று கோரி மனுத்தாக்கல் செய்தேன். அப்போது முதல் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகிறேன். எனக்கு இதுவரை சாதிச் சான்று கிடைக்கவில்லை.
நான் தற்போது ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. என்னுடைய தந்தை கூலி வேலை செய்வதில் கிடைக்கும் சொற்ப வருமானத்திலேயே கஷ்டப்பட்டு படித்து வருகிறேன். எனக்கு சாதிச் சான்று கிடைக்காததால் இதுவரை ஸ்காலர்ஷிப் கூடப் பெறமுடியவில்லை.
தற்போது கல்லூரியில் கட்டாயம் சாதிச் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அதனால், நானும் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். அதை வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்தார்கள். எனக்கு சாதிச் சான்றிதழ் கொடுக்கலாம் என அதிகாரிகள் பரிந்துரைத்த போதிலும், கோட்டாட்சியர் எனது மனுவை நிராகரித்துவிட்டார்.
என்னுடைய தந்தையின் சான்றிதழை நான் இணைக்காததால் எனக்கும் சாதிச் சான்று கொடுக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். என்னுடைய தந்தை படிக்கவில்லை. அதனால் அவரிடம் எந்த சான்றும் கிடையாது. அவர் படிக்கவில்லை என்பதற்காக என்னையும் படிக்கவிடாமல் செய்ய முயற்சி செய்கிறார்களா… எனக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்காவிட்டால் படிப்பைக் கைவிட முடிவு செய்திருக்கிறேன். என் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொறுப்பு அதிகாரிகளின் கையிலேயே இருக்கிறது” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “மனு கொடுத்திருக்கும் மாணவியின் தந்தைக்கு பாளையங்கோட்டை பூர்வீகம் கிடையாது. அதன் காரணமாகவே சாதிச் சான்றிதழ் மனு நிராகரிக்கப்பட்டது” என்றார்கள். ஆனால், மாணவி காளீஸ்வரியோ, தன்னுடைய தந்தை இசக்கி அதே முகவரியில் 25 வருடங்களாகக் குடியிருந்து வருவதாகத் தெரிவித்தார்.