நெல்லை: வட மாநிலங்களில் இருந்து பல்லாரி வெங்காயம் வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதால் இதன் விலை கிலோ ரூ.16ஆக சரிந்துள்ளது. அன்றாட அனைத்து வகை உணவிலும் சேர்க்கப்படும் முக்கிய பொருளாக வெங்காயம் உள்ளது. சமையலில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது சேர்ந்தால்தான் உணவு ருசிக்கும் என்பதால் நாள்தவறாமல் மக்கள் இதை தேவைக்கு ஏற்ப வாங்கத்தவறுவதில்லை. நாடுமுழுவதும் வெங்காயம் அதிகம் விளைவிக்கப்படுவதால் தேவைக்கு போக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. மழை அதிகம் பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்படும்.
வட மாநிலங்களில் பெரிய வெங்காயம் எனப்படும் பல்லாரி வெங்காயம் அதிகம் விளைவிக்கப்படுவதால் இதன் வரத்து அதிகமாக உள்ளது. சிறிய வெங்காயம் விலை உயரும் போது பலர் பெரிய வெங்காயத்தை மட்டும் பயன்படுத்தி சமாளிக்கின்றனர். பல்லாரி வெங்காயத்தின் விலை கடந்த பல மாதங்களாகவே குறைவாகவே இருந்தது. இதனால் சாலைகளில் குவித்து போட்டு விற்பனை செய்தனர். இந்த நிலையில் நாசிக், பூனே, அகமத்நகர், பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் பல்லாரி வெங்காயம் அளவு கடந்த ஒரு வாரமாக இரட்டிப்பாகியுள்ளது. இதனால் இதன் விலை மேலும் சரிந்துள்ளது. கடந்த வாரம் முதல் ரக பல்லாரி ரூ.40க்கும் 2ம் ரகம் ரூ.25க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் ரூ16 விலையில் பாளை உழவர் சந்தையில் விற்பனையானது. முதல் ரகம் பல்லாரி ரூ.18 ஆக விற்கப்பட்டது. சின்ன வெங்காயம் விலை இன்று ஒரு கிலோ ரூ.36 மற்றும் ரூ.38 விலைகளில் விற்கப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வடமாநில பல்லாரி மட்டுமின்றி பாவூர்சத்திரம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் விளையும் பல்லாரியும் அதிக அளவில் வருவதால் விலை குறைந்து வருகிறது. அடுத்த சில தினங்களுக்கு இந்த விலை குறைவு நீடிக்க வாய்ப்புள்ளது என்றனர். விலை குறைந்துள்ளதால் பல்லாரி வெங்காயத்தை மக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.