மீண்டும் பாஜக கூட்டணியின் வசமாகிறதா நாகாலாந்து?! – Exit Polls சொல்வதென்ன?

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒன்பது மாநில சட்டமன்றத் தேர்தல்களில், வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. திரிபுரா மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 16-ம் தேதியே முடிந்துவிட்ட நிலையில், மேகாலயாவிலும், நாகாலாந்திலும் இன்று வாக்குப்பதிவு நிறைவுற்றது.

நாகாலாந்து தேர்தல்

இதில் நாகாலாந்து மாநிலத்தில், அகுலேடா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கஜேடோ கிமினி ஏற்கெனவே போட்டியின்றி வெற்றிபெற்றதையடுத்து, 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த தேர்தலில் பா.ஜ.க-வும், தேசிய மக்கள் கட்சியும் இணைந்து சுயேச்சைகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தன. அதேபோல இந்த முறையும் பா.ஜ.க-வும், தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியும் இணைந்தே தேர்தலை எதிர்கொள்கின்றன. காங்கிரஸ் தனித்துக் களம் காண்கிறது.

ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 31 இடங்கள் போதும் எனும் நிலையில், மார்ச் 2-ம் தேதியன்று மூன்று மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.

நாகாலாந்து – கருத்துக்கணிப்பு முடிவுகள்

வாக்குப்பதிவு நடந்துமுடிந்த 59 தொகுதிகளுக்கான, Matrize-Zee News-ன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி (பாஜக+தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி) 39 இடங்களும், நாகா மக்கள் முன்னணி 3 இடங்களும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களும், மற்றவை 15 இடங்களும் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல Axis My India-ன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி (பாஜக+தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி) 38-48 இடங்களும், நாகா மக்கள் முன்னணி 3-8 இடங்களும், காங்கிரஸ் கட்சி 1-2 இடங்களும், மற்றவை 5-15 இடங்களும் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.