பெங்களூரு சிறையிலிருக்கும் ஹரி நாடார் மீண்டும் கைது! – மோசடி வழக்கில் சென்னை காவல்துறை நடவடிக்கை

நெல்லை மாவட்டம், மேல இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், ஹரிகோபால கிருஷ்ணன் என்ற ஹரி நாடார். உள்ளூரிலிருந்து வேலை தேடி மும்பை சென்ற அவர், அங்கு சில காலம் வேலை செய்துவிட்டு, சென்னையில் வந்து செட்டில் ஆனார். அப்போது ராக்கெட் ராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.

நடமாடும் நகைக்கடையாக ஹரி நாடார்

கழுத்துக்குக் கீழ் வரை நீண்டு கிடக்கும் தலைமுடி, உடல் முழுவதும் நகைகள் என வித்தியாசமான கெட்-அப் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். நடமாடும் நகைக்கடையாக வலம் வந்த அவரைப் பார்க்கவே மக்கள் கூடத் தொடங்கினார்கள். பின்னர் ராக்கெட் ராஜா தொடங்கிய பனங்காட்டுப்படை என்ற அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

2019-ல் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவருக்கு ஆதரவாக ராக்கெட் ராஜா பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் நாம் தமிழர் கட்சியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்து அரசியல் கட்சியினரின் கவனத்துக்குள்ளானர்.

அதைத் தொடர்ந்து 2021-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக ராக்கெட் ராஜா ஹெலிகாப்டரில் வந்து வாக்குச் சேகரித்தார். இளைஞர்கள், சமுதாய அமைப்பினர் எனப் பலரிடமும் தீவிரமாக வாக்குச் சேகரித்த ஹரி நாடார் 37,726 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

2019-ம் ஆண்டு முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்டபோதே ஹரி நாடார் மீது ஒன்பது வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில், கடந்த 2021 மே மாதம் பண மோசடி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் கர்நாடக போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்தனர்.

வேட்புமனுத் தாக்கலின்போது

சிறையில் இருக்கும் ஹரி நாடார் தனக்கு ராக்கெட் ராஜா தரப்பிலிருந்து உதவி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அவர் எந்த உதவியும் செய்யவில்லை. அத்துடன், ஹரி நாடாரின் மனைவியும் அவர்மீது பரபரப்பு புகார்களைத் தெரிவித்த நிலையில், ஹரி நாடாருக்கு ஏற்கெனவே அறிமுகமாகியிருந்த மலேசியாவைச் சேர்ந்த பெண் மட்டுமே சட்டரீதியான உதவிகளைச் செய்தார். அவருக்கும் ராக்கெட் ராஜா தரப்பிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக சிறையில் இருந்தபடியே ஹரி நாடார் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் இருவருக்குமிடையே பிரிவினையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், 2021-ம் ஆண்டு ஹரி நாடார் கைதானபோதே அவர்மீது கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில் பரகத் என்ற தொழிலதிபரும் புகாரளித்திருந்தார். அந்தப் புகார் தொடர்பாக தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். அவர் புகாரளித்து 22 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், தற்போது ஹரி நாடார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றனர்.

கைது விவரம்

ஏற்கெனவே ஹரி நாடார், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சூழலில், சென்னை மத்திய குற்றப்பிரிவு (சி.சி.பி) ஆய்வாளர் பிரசித் தீபா இன்று (பிப்ரவரி 27-ம் தேதி) பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று, ஹரி நாடார் அந்த வழக்கில் கைதான விவரத்தை நேரில் தெரிவித்தார். அவர்மீது 406, 402 ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு தொடர்பாக ஹரி நாடாரை விரைவில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.