ஈரோடு கிழக்கு தொகுதியில் 75 சதவீத வாக்குகள் பதிவானது: நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி தொகுதியில் 74.69 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் கூறினர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, கடந்த மாதம் 4ம் தேதி மரணமடைந்ததையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.  திமுக கூட்டணியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் மேனகா உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.

இதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை துவங்கியது. இதற்காக தொகுதி முழுவதும் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும்,  சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்பட்டு, வாக்குச்சாவடி முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, காலை 7 மணி முதல் பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தொடக்கம் முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். 77 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 5 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால், வாக்காளர்கள் சின்னங்களை கண்டுபிடித்து வாக்களித்தனர். இதனால் சிறிது காலதாமதம் ஏற்பட்டது. மேலும், வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர், 200 மீட்டர் அளவுகளில் எல்லைக் கோடுகள் வரையப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு நடைபெற்ற 238 வாக்குச்சாவடிகளில், பதற்றமானவையாக காணப்பட்ட 34 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து வாக்குசாவடிகளிலும் சிசிடிவி கேமரா மூலம் வாக்குபதிவு  கண்காணிக்கப்பட்டது.

தொகுதியில் பதற்றமான வாக்குசாவடிகளில் வெளிப்புற பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. வாக்குச் சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் எளிதில் சென்று வாக்களிக்க ஏதுவாக சாய்தளம் அமைக்கப்பட்டிருந்தது. வெயில் கடுமையாக இருந்ததால் வாக்குசாவடி முன்பு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் ஆண்கள் 12,679 பேரும், பெண்கள் 10,294 பேரும் என 22,973 பேர் வாக்களித்திருந்தனர். 11 மணி நிலவரப்படி 27.89 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

இதில் ஆண்கள் 32,562 பேரும், பெண்கள் 30,907 பேரும் என மொத்தம் 63,461 பேர் வாக்களித்திருந்தனர். மதியம் 1 மணி நிலவரப்படி 44.56 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆண் வாக்காளர்கள் 49,740, பெண் வாக்காளர்கள் 51,649, மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேர் என மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 92 பேர் வாக்களித்திருந்தனர். மாலை 3 மணி நிலவரப்படி 59.22 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆண்கள் 65,350 பேரும், பெண்கள் 69,400, மூன்றாம் பாலினத்தவர்கள் 8 பேர் என 1 லட்சத்து 34 ஆயிரத்து 758 பேர் வாக்களித்திருந்தனர். மாலை 6 மணி நிலவரப்படி 74.69 வாக்குகள் பதிவானதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் கூறினார்.  

82,021 ஆண் வாக்காளர்களும், 87,907 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 17 பேரும் வாக்களித்துள்ளனர். மொத்தமாக பதிவான வாக்குகள் 1,69,945. கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 66.23 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. தற்போது 8.46 சதவீதம் கூடுதலாக பதிவாகி உள்ளது. இடைத்தேர்தல் வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில்,  உள்ளூர் போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ரயில்வே பாதுகாப்பு  படையினர் மற்றும் துணை ராணுவத்தினர் என சுமார் 3 ஆயிரம் பேர் ஈடுபட்டிருந்தனர்.  பாதுகாப்பு பணிகளை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் நேரில் சென்று பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.

வாக்கு பெட்டிகள் மையத்திற்கு அனுப்பி வைப்பு: வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள், வேட்பாளர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அந்த பெட்டிகள் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டு போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன், ஈரோடு அடுத்த சித்தோடு ஐஆர்டிடி கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்து அறையை பூட்டி சீல் வைத்தனர். நேற்று இரவு முதலே 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 3 அடுக்கு பாதுகாப்பில் துணை ராணுவத்தினரும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். 2 தீயணைப்பு வாகனங்களில் வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். நாளை மறுதினம் (வியாழன்) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

* சுட்டெரிக்கும் வெயிலிலும் ஜனநாயக கடமை
ஈரோடு மாநகரில் நேற்று வழக்கத்திற்கு அதிகமாக வெயில் சுட்டெரித்தது. அனைத்து வாக்குச்சாவடி முன்பும் வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தாலும், வாக்காளர்கள் அதிகளவில் வந்ததால் சுட்டெரிக்கும் வெயிலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

* 9.30 மணி வரை ஓட்டு போட்ட மக்கள்
ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் சக்தி வீதியில் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு பின்னரும், 400க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரிசையில் நின்றனர். வாக்குப்பதிவுக்கான நேரம் முடிந்ததையடுத்து அவர்களுக்கு டோக்கன் விநியோகித்து, வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 9.30 மணி வரை வாக்களித்தனர். இதேபோல், வீரப்பன் சத்திரம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியிலும் டோக்கன் விநியோகித்து, வாக்களிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

* ஈரோட்டில் நடப்பது நாகரிகமான அரசியல்: அதிமுக வேட்பாளர் பாராட்டு
அதிமுக வேட்பாளர் தென்னரசு ஈரோடு கருங்கல்பாளையம் கல்லு பிள்ளையார் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தேர்தலில் நான் வெற்றி பெறுவேன் என 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது. தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் நன்றாக செய்துள்ளது. ஈரோட்டில் எப்போதும் நாகரிகமான அரசியல் இருக்கும். திமுக, அதிமுக, காங்கிரஸ் என எந்த கட்சியாக இருந்தாலும் சண்டை சச்சரவு வராது. அநாகரிகமாக ஒருவரை ஒருவர் திட்டி பேசிக் கொள்ள மாட்டார்கள். அடிமட்ட தொண்டர்களுக்குள் சண்டை வருமே தவிர தலைவர்களுக்குள் சண்டை வராது. தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது. இன்று வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக எனக்கு தகவல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* திடீர் பழுதால் 5 இயந்திரங்கள் மாற்றி வாக்குப்பதிவு: கலெக்டர் தகவல்
ஈரோடு சம்பத்நகர் அம்மன் மெட்ரிக் பள்ளியில் ஈரோடு கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுன்னி தனது மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்பாக, மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தது கண்டறியப்பட்டு, மாற்று இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது என்றார்.

* ஓட்டு போட அடம் 3 வயது குழந்தைக்கு மை வைத்த அதிகாரி
கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் கல்பனா என்ற பெண், 3 வயது குழந்தை லக்சியாவை அழைத்து வந்திருந்தார். வாக்களிப்பதற்காக கல்பனாவின் விரலில் அதிகாரி மை வைத்தார். குழந்தை லக்சியா தனக்கும் விரலில் மை வைக்கும்படி அடம் பிடித்து அழுதது. தாயும் ஊழியர்களும் சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை. வேறு வழியின்றி குழந்தை லட்சியாவின் விரலுக்கும் அதிகாரி மை வைத்தார். வெளியே வந்த லக்சியா தானும் ஓட்டுபோட்டதாக கூறி மை வைத்த விரலை உயர்த்தி காட்டினாள்.

* அமைதியான தேர்தல் – ஐஜி சுதாகர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் வாக்குசாவடிகளை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் தேர்தல் நடந்தது’’ என்றார்.

* ஆர்வமாக வாக்களித்த முதல் தலைமுறையினர்
காலை 9 மணிக்கு பிறகு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. மூதாட்டிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதல் முறை வாக்களிக்கும் இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு நகரும் சக்கர நாற்காலியும், சாய்வு தள வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஊழியர்களே மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாவடி வரை அழைத்து சென்று, வாக்களித்த பின், வெளியே அழைத்து வந்தனர்.

* கரை வேட்டி, துண்டுடன் வந்த வேட்பாளர்கள் நிறுத்தம்
அதிமுக வேட்பாளர் தென்னரசு நேற்று காலை ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதை பார்வையிட சென்றார். அப்போது, கட்சி கரை வேட்டி மற்றும் கட்சி துண்டு அணிந்தபடி வந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவ வீரர், அவரை தடுத்து நிறுத்தினார். அவர் இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசி, வேட்பாளர் தென்னரசுக்கு புரிய வைக்க முயன்றார். ஆனால், மொழி தெரியாததால் துணை ராணுவ வீரரிடம் வாக்குவாதம் செய்தார். அங்கு வந்த அதிகாரிகள் தென்னரசிடம் தேர்தல் விதிமுறைகளை எடுத்துக்கூறியதால், சாதாரண வெள்ளை வேட்டி அணிந்தபடி வாக்குச்சாவடிக்குள் சென்றார். தேமுதிக வேட்பாளர் ஆனந்தும் கட்சி கரை வேட்டி மற்றும் துண்டு அணிந்தபடி வந்தார். அவரையும் தடுத்து நிறுத்தினர். பின்னர், சாதாரண உடையணிந்து வந்து வாக்களித்து சென்றார்.

* மூதாட்டி மயங்கி
விழுந்ததால் மறியல்
ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 60 வயது மூதாட்டி திடீரென மயங்கி விழுந்தார். அங்கு தண்ணீர் கூட இல்லாததால் அதிருப்தி அடைந்து, எஸ்டிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஏடிஎஸ்பி ஜானகி ராமன் மற்றும் அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

* ஓட்டு போட்ட வேட்பாளர்கள்
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் காலை 9 மணியளவில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு காலை 9.15 மணியளவில் கருங்கல்பாளையம், கல்லுப்பிள்ளையார் கோயில் வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார். தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்த் பெரிய அக்ரஹாரம் மதரஸா பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் காலை 7.15 மணியளவில் வாக்களித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா கலைமகள் பள்ளியில் வாக்களித்தார். இதேபோல் சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

* அதிமுகவுக்கு இதுவரை இல்லாத தோல்வி; ஈவிகேஎஸ்.இளங்கோவன் உறுதி
ஈரோடு கிழக்கு தொகுதியில், ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று காலையில் வாக்களித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரங்களை பலப்படுத்தவும், அவரது 21 மாத நல்லாட்சிக்கு அடையாளமாகவும் இந்த வெற்றி கண்டிப்பாக அமையும். அதேபோல் ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு கண்டிப்பாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக, வெள்ளோட்டமாக இந்த தேர்தல் முடிவு அமையும்.  தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. நான் வாக்களிக்கும்போது என் கையில் மை வைக்கப்பட்டது. 10 நிமிடம் ஆகியும் அப்படியே இருக்கிறது. மை என்பது பொய் அல்ல நிஜம். அதிமுக இதுவரை இல்லாத தோல்வியை இந்த தேர்தலில் சந்திக்கும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.