ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: மொத்தமாக பதிவான வாக்குகள்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Erode East By-Election Total Vote Percentage: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜன. 4ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட்டனர். தொடர்ந்து இந்த தேர்தலின் வாக்குபதிவு பிப். 27ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை  செலுத்தினர். அவ்வபோது வாக்குபதிவு பதிவு சதவீதம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர். 

வாக்குப்பதிவு – விவரம் 

ஈரோடு கிழக்கு தொகுயில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் இருந்த நிலையில், அதில் 74.79 சதவீதமாக 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்துள்ளனர். அதில், வாக்களித்ததில் 82 ஆயிரத்து 138 பேர் ஆண்கள் என்றும், 88 ஆயிரத்து 37 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது. 9 மணியளவில் 10.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. தொடர்ந்து, 11 மணியளவில் 27.70 சதவீதமும், மதியம் 1 மணியளவில் 44.58 சதவீதமும், மதியம் 3 மணியளவில் 59. 22 சதவீதமும், மாலை 5 மணியளவில் 70. 58 சதவீதமும் பதிவாகியிருந்தது. 

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம், 74. 79 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, 6 மணிக்கு பின்னரும், பல வாக்குச்சாவடிகளில் டோக்கன் அளிக்கப்பட்டு வாக்குப்பதிவு சிறிதுநேரம் நடத்தப்பட்டது.

பலத்த பாதுகாப்பு

இதன் பின்னர் வாக்குபதிவு நிறைவு பெற்ற வாக்குச்சாவடியில் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குபதிவு இயந்திரம் சீல் வைக்கப்பட்டு துணை ராணுவ படை மற்றும் போலீசார்  பாதுகாப்புடன் சித்தோடு பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

மேலும் மூன்று பாதுகாப்பு போடப்பட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குபதிவு மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் சில இடங்களில் ஏற்பட்ட பிரச்சினை உள்ளிட்ட காரணமாக பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.