உதயநிதி ஸ்டாலின் – பிரதமர் மோடி சந்திப்பின் பின்னணி… திமுகவின் சரண்டர் பாலிடிக்ஸ்!

தமிழ்நாட்டு அமைச்சரவையில் கடந்த டிசம்பர் மாதம் புதிய வரவாக காலடி எடுத்து வைத்தவர்
உதயநிதி ஸ்டாலின்
.
திமுக
ஆட்சி அமைந்த போதே உதயநிதிக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என பேசப்பட்டது. ஆனால் 21 மாதங்கள் கழிந்த நிலையில் பொறுப்பு வழங்கப்பட்டது. அதற்கு முன்பே நம்பர் 2 அதிகார மையமாக திகழ்ந்த உதயநிதி ஸ்டாலினின் செல்வாக்கு அமைச்சரான பின்னர் மேலும் உயர்ந்தது. இந்நிலையில் தனது திருமண நாளை ஒட்டி மனைவி கிருத்திகா உடன் சிங்கப்பூர் சென்றிருந்தார்.

டெல்லி பயணம்

அங்கிருந்து நேரடியாக சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக இன்று காலை டெல்லி சென்றுள்ளார். மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசுவார் எனக் கூறப்பட்டது. இந்த சூழலில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு மரியாதை நிமித்தமாக சந்திக்க இருக்கிறார் என்றும், தமிழ்நாட்டின் நலன் தொடர்பாக சில கோரிக்கை மனுக்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

இந்நிலையில் பிரதமரை சந்திக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாலை 4.30 மணிக்கு மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறப்பட்டாலும், பின்னணியில் பல்வேறு அரசியல் கணக்குகள் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. முதலில் இந்த சந்திப்பே சர்ச்சையாகி இருக்கிறது. வழக்கமாக பிரதமரை சந்திக்க அவ்வளவு சீக்கிரம் நேரம் கிடைக்காது. அப்படி கிடைத்தால் தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் செல்லும் போது அதிகாரிகள் உடன் செல்வர்.

சந்திப்பின் பின்னணி

முன்னதாக பல்வேறு கட்ட ஆலோசனைகள் செய்துவிட்டு, என்னென்ன கோரிக்கைகள் வைக்க வேண்டும். மனுக்கள் வழங்க வேண்டும் என்ற திட்டமிடுதலுடன் செல்வர். ஆனால் உதயநிதி ஸ்டாலின் தனிப்பட்ட விஷயத்திற்காக சிங்கப்பூர் சென்றுவிட்டு வரும் வழியில் டெல்லியில் பிரதமரை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் என்னென்ன பேசப்படும் என்பது குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்.

நீட் விலக்கு, மதுரை எய்ம்ஸ்

இதையொட்டி சென்னையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் ஸ்டாலின் பிறந்த நாளுக்கு பிரதமரை அழைக்க வாய்ப்பே இல்லை. நீட் தேர்விற்கு விலக்கு பெற்று தருவோம் என்பதை உதயநிதி ஸ்டாலின் நீண்ட காலமாக கூறி வருகிறார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானமே நடக்கவில்லை என்பதை விமர்சிக்கும் வகையில் 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒற்றை செங்கலை காண்பித்து அரசியல் செய்தார்.

சர்வதேச விளையாட்டு போட்டிகள்

எனவே இந்த இரண்டு விஷயங்கள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர். இதுதவிர சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தும் வகையில் கோரிக்கைகள் முன்வைக்கப்படலாம். ஏனெனில் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் ஆதன் தமிழ் யூ-டியூப் சேனலுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், பிரதமர் மோடி – உதயநிதி ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி குறித்து சில விஷயங்களை முன்வைத்தார்.

ரகசிய கூட்டணி

கிட்டதட்ட சரண்டர் பாலிடிக்ஸ் தான். திமுக – பாஜக இடையிலான ரகசிய கூட்டணி அம்பலப்பட்டு விட்டது என்கிறார். அதாவது, டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக மத்திய அரசு சில அஸ்திரங்களை ஏவி வருகிறது. துணை முதல்வரையே கைது செய்யும் அளவிற்கு நிலைமை சென்றுள்ளது. இதேபோல் திமுக மீது அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட ஏஜென்சிகளை ஏவி விடாதீர்கள். வெளியில் தான் திட்டுவது போல திட்டுவோம். ஆனால் நாங்கள் உங்களிடம் சரண்டராகி விட்டோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நம்பர் 2 அதிகார மையம்

இதை சொல்வதற்காக தான் பிரதமர் மோடி, உதயநிதி ஸ்டாலின் சந்திப்பே என்று சவுக்கு சங்கர் பகீர் கிளப்பியுள்ளார். அதற்கு திமுக அரசு சார்பில் உதயநிதியை அனுப்பி வைப்பார்களா? என்ற கேள்வி எழலாம். தற்போதைய திமுக ஆட்சியில் அதிகாரத்தில் நம்பர் 2 என்றால் உதயநிதி ஸ்டாலினை தான் பலரும் கூறுவர். அதனால் தான் அவர் நேரில் சென்றுள்ளதாக விளக்கம் கொடுத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.