சென்னை: திருநங்கை கொலை வழக்கு; லாரி டிரைவரைக் கைதுசெய்த போலீஸ்! – என்ன நடந்தது?

சென்னை, மாதவரம் அருகிலுள்ள மாத்தூர் 200 அடி சாலையில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டுவருகிறது. அந்தப் பகுதியில் பலரும் சரக்கு எடுத்துவரும் கனரக வாகனங்களை நிறுத்துவது வழக்கம். அப்படி, கடந்த 22-ம் தேதி மணலி பகுதியைச் சேர்ந்த ஒரு லாரி ஓட்டுநர், அந்தப் பகுதியில் நிறுத்திவைத்திருந்த லாரியை எடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது, லாரியின் அருகே ஒரு திருநங்கை கைகள் கட்டப்பட்ட நிலையில் முகத்தில் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து சடலமாகக் கிடந்திருக்கிறார்.

சனா

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர், இது குறித்து மாதவரம் பால் பண்ணை பகுதி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். சம்பவமறிந்து விரைந்து வந்த போலீஸார் திருநங்கையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது உயிரிழந்த திருநங்கை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சரவணன் என்ற சனா என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், திருநங்கையைக் கொலைசெய்தது ராமநாதபுரம் மாவட்டம், பட்டினம்காத்தம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கணேசன் என்பது தெரியவந்தது. அவரைக் கைதுசெய்து விசாரணை செய்ததில், சம்பவம் நடந்த தினத்தன்று லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு திருவொற்றியூருக்கு வந்திருக்கிறார் கணேசன். அப்போது மாதவரம் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு உணவருந்தியிருக்கிறார். அங்கு நின்றுகொண்டிருந்த திருநங்கை, தன்னுடன் பாலியல் உறவுகொள்ள 500 ரூபாய் கேட்டிருக்கிறார்.

லாரி ஓட்டுநர் கணேசன்

இதைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக இருந்திருக்கிறார்கள். பின்னர் திருநங்கை, கணேசனிடம் 5,000 ரூபாய் தரும்படி தகராறு செய்திருக்கிறார். மேலும், செல்போன் மூலம் மற்ற திருநங்கைகளை அங்கே வரவழைக்க முயன்றிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், சனாவை அடித்து கீழே தள்ளி கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கிறார்.

கணேசனைக் கைதுசெய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.