ஹவாய் செருப்பு அணியும் சாமானியரும் விமானத்தில் செல்ல வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

பெங்களூரு: ஹவாய் செருப்பு அணியும் சாமான்ய மக்களும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை ஒன்றிய, மாநில டபுள் இன்ஜின் பாஜ அரசு எடுத்து எடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திரமோடி கூறினார். கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் புதிதாக தாமரை வடிவிலான விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ரூ.450 கோடி மதிப்பிலான இவ்விமான நிலையத்தில் 300 பயணிகள் வரை பயணிக்கலாம். பெங்களூருவை தொடர்ந்து கர்நாடகாவின் மிகப்பெரிய 2வது விமான நிலையமாக இது அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தை நேற்று பிரதமர் நரேந்திரமோடி  திறந்து வைத்து பேசியதாவது, ‘கர்நாடக மாநிலம் வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. ஒன்றிய மற்றும் மாநிலத்தில் பாஜ கட்சி ஆட்சியில் இருப்பதால் வளர்ச்சி பணிகள் விரைவாக நடைபெறுகின்றன. டபுள் இன்ஜின் அரசு என்பதால் சாலை, ரயில்வே திட்டங்கள் கடந்த ஆட்சியை விட விரைவாக நடந்து வருகின்றன.

ஏழைகளின் நலனுக்காக எங்கள் அரசு செயல்படுகிறது. பாஜ ஆட்சியில் கிராமங்களிலும் வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன. அதே நேரம் இதற்கு முன்பு இருந்த அரசுகள் கிராமங்களை புறக்கணித்தன. சிறிய கிராமங்களில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை. டபுள் இன்ஜின் அரசின் நிர்வாகத்தில் கர்நாடகாவின் ஒட்டுமொத்த பகுதியும் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
தேசிய கவி குவெம்பு பிறந்த இந்த ஊரில் விமான நிலையம் திறந்து வைப்பதில் எனக்கு மகிழ்ச்சி அதிகம் கிடைத்துள்ளது. சாதாரண நபர்களும் விமானத்தில் பயணிக்கவேண்டும். ஹவாய் செருப்பு அணியும் நபர்களும் விமானத்தில் பறக்க வேண்டும் என்பதே எங்கள் அரசின் நோக்கமாகும். இதை மனதில் வைத்து விமான நிலையங்கள், விமானம் தயாரிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். உதான் திட்டம் இதற்காக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விமானங்கள் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டன. தற்போது நமது உள்நாட்டில் விமானங்கள் தயாரிக்கப்படுகிறது. ராணுவ தளவாடங்களும் நமது நாட்டில் தயாரிக்கப்படுகிறது.  இவ்வாறு மோடி பேசினார்.

* கார்கேவை  அவமதிக்கும் காங்கிரஸ் பெலகாவியில் பிரதமரின் கிசான் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் 13வது தவணையான ரூ.16 ஆயிரம் கோடி நிதி செலுத்தும் திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புதிய ரயில்நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதையடுத்து அங்கு பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
‘காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநில தலைவர்களை எப்போதும் மதித்ததில்லை. தற்போது தேசிய தலைவராக உள்ள கார்கேவையும் அக்கட்சி தலைமை மதிப்பதில்லை.  கர்நாடக மாநில மைந்தரான கார்கே மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராக 50 ஆண்டு அனுபவம் நிறைந்தவர். அவரால் மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்தார். ஆனால் அவரை சட்டீஸ்கரில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்ட விதம் பார்த்து வருத்தமாக இருந்தது. சட்டீஸ்கரில் வெயில் அதிகம். மல்லிகார்ஜூன கார்கே வெயிலில் நிற்கிறார். அவருக்கு குடை கூட பிடிக்கவில்லை. ஆனால் அக்குடை அவர் பக்கத்தில் நிற்கும் யாருக்கோ பிடிக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவரின் அனுபவம், வயதை கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை. இதிலிருந்து கார்கேவை ஒப்புக்கு தலைவராக வைத்துள்ளனர். கட்சியின் ரிமோட் கன்ட்ரோல் வேறு யாரிடமோ இருக்கிறது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.