திருவண்ணாமலை ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.70 லட்சம் அரியானாவில் பதுக்கல்: முதலில் திட்டம் போட்டது வங்கிக்குதான்; கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.70 லட்சம் அரியானாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தனிப்படை போலீசார் அரியானாவுக்கு விரைந்து உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி 4 ஏடிஎம்களை காஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து ரூ.72.79 லட்சத்தை மர்மகும்பல் கொள்ளையடித்தது. இதுதொடர்பாக கொள்ளை கும்பலின் மூளையாக செயல்பட்ட ஹரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப் (35), ஆசாத்(37) ஆகிய 2 பேரை துப்பாக்கி முனையில் தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் கர்நாடக மாநிலம் கோலாரில் (கேஜிஎப்), ஒரு லாட்ஜில் கொள்ளை கும்பலை சேர்ந்த கோலார் குர்தீஷ் பாஷா(43), அசாம் மாநிலம் அஷ்ரப் உசேன்(26) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களில் முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் கடந்த 22ம் தேதி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இன்றுடன் விசாரணை நிறைவடைகிறது. இதையடுத்து திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இருவரையும் இன்று ஆஜர்படுத்த உள்ளனர். கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கைதானவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலம்: கொள்ளையடித்த ரூ.70 லட்சத்தை ஹரியானா மாநிலத்தில் பதுக்கி வைத்து உள்ளோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கியை குறி வைத்து கொள்ளையடிக்க பலமுறை நோட்டமிட்டோம். அது சாத்தியமில்லை என தெரிந்த பிறகே ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையடிக்கும் முடிவுக்கு வந்தோம். மிக பெரிய தொகையை கொள்ளையடித்ததால் அதை கொண்டு செல்ல வசதியாக டாடா சுமோவை திருடினோம். பின்னர் ஏற்கனவே திட்டமிட்டபடி சோதனைச்சாவடிகள் இல்லாத வழித்தடங்களில் சென்று கோலாரில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம் பணத்தை ஹரியானாவுக்கு கொண்டு சென்று பதுக்கினோம்.

தமிழ்நாடு போலீஸ் இவ்வளவு விரைவாக செயல்பட்டு பிடித்து விடுவார்கள் என நினைக்கவில்ைல. ஏடிஎம் இயந்திரத்தையே தீயிட்டு கொளுத்தினோம், எல்லா தடயங்களையும் அழித்துவிட்டதால்  நெருங்க முடியாது என நினைத்தபோது கொள்ளையடித்த அன்றே எங்களை பின்தொடர்ந்து வந்து பிடித்துவிட்டனர். இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, அரியானாவில் உள்ள ரூ.70 லட்சத்தை மீட்க தனிப்படை அங்கு விரைந்து உள்ளது. மேலும், கர்நாடாக மாநிலம் கோலாரில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.