மதுரை எய்ம்ஸ் தலைவராக : உ.பி. டாக்டர் நியமனம்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் பிரசாந்த் லவானியாவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்காக தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பில் சுமார் 200 ஏக்கரில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மேற்கொள்ள உள்ளது. கட்டுமானப் பணி 2024-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி, 2028-ல் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கை ஏற்கெனவே கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது. இந்த ஆண்டும், இரண்டாவது ஆண்டாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த மாணவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கடராமன் கடந்த ஆண்டு செப்டம்பரில் நியமனம் செய்யப்பட்டார். அவர் உடல்நலக்குறைவால் அண்மையில் காலமானார். இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவனைக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியாவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.