காணொலி மூலம் நடக்கும் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டுமென்ற உத்தரவுக்கு தடை: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: காணொலி மூலம் நடக்கும் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்தது. கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் வாஷ்மி சுதர்ஷினி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நானும், அமெரிக்காவைச் சேர்ந்த ராகுல் எல்.மதுவும் காதலித்தோம். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். திருமணத்துக்காக ராகுல் இந்தியா வந்தார். ஆனால் காரணம் இல்லாமல் எங்களுக்கு திருமணம் செய்து வைக்க மணவாளக்குறிச்சி சார் பதிவாளர் மறுத்துவிட்டார். விசா காலம் முடிந்ததால் ராகுல் அமெரிக்கா சென்று விட்டார். தற்போது அவரால் இந்தியா வர முடியாத சூழல் உள்ளது. என்னாலும் உடனடியாக அமெரிக்கா செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இருவரும் (வீடியோ கான்பரன்ஸ்) காணொலி வாயிலாக திருமணம் செய்யவும், எங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யுமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, திருமண பதிவு சட்டத்தில், ‘காணொலியில் திருமணம் நடைபெறக்கூடாது என சொல்லப்படவில்லை. சார் பதிவாளர் முன்பு மனுதாரர்கள் நேரில் ஆஜராகியுள்ளனர். இருவருக்கும் அப்போது திருமணம் செய்து வைத்திருந்தால் இப்பிரச்னை வந்திருக்காது. அதிகாரிகளின் தவறால் யாரும் பாதிக்கப்படக் கூடாது. பல்வேறு நாடுகளில் ஆன்லைன் வழியாக திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரர் காணொலி வழியாக அமெரிக்காவில் இருக்கும் ராகுலை திருமணம் செய்ய எந்த சட்டத் தடையும் இல்லை. ராகுல் ஏற்கனவே மனுதாரருக்கு பவர் வழங்கியுள்ளார். இதனால் திருமண பதிவேட்டில் மனுதாரர் அவர் சார்பிலும், ராகுல் சார்பிலும் கையெழுத்திடலாம். பின்னர் சட்டப்படி திருமண பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும்’ என  உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மணவாளக்குறிச்சி சார்பதிவாளர் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த அப்பீல் மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் பிளீடர் சதீஷ்குமார் ஆஜராகி, ‘‘தனி நீதிபதியின் உத்தரவு சிறப்பு திருமண பதிவுச் சட்டத்தின் பிரிவு 12 மற்றும் 13ன் படி ஏற்புடையதல்ல. நீண்ட விவாதத்திற்கு பின் முடிவு எடுக்க வேண்டிய விவகாரத்தில் அவசரமாக எந்த முடிவுக்கும் வர முடியாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். இதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், மனுவிற்கு வாஷ்மி சுதர்ஷினி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரம் தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.