இந்து என்பது மதம் அல்ல; அது வாழ்வியல் நெறிமுறை – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி : மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள ‘முகல் கார்டன்’ அண்மையில்தான் ‘அம்ரித் உத்யன்’ என பெயர் மாற்றப்பட்டது.

ஆனால் நம் நாட்டில் உள்ள பழமையான, வரலாற்று சிறப்புமிக்க, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல இடங்கள் இன்னமும் வெளிநாட்டு ஊடுருவல்காரர்கள், அவர்களுடைய வேலைக்காரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலேயே உள்ளன. இது நமது இறையாண்மை மற்றும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள பல உரிமைகளுக்கு எதிரானது ஆகும்.

எனவே, வெளிநாட்டு ஊடுருவல்காரர்களால் மாற்றப்பட்ட பெயர்களை அதன் அசல் பெயரில் மாற்றுவதற்காக ஒரு ஆணையத்தை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். பல இடங்களின் அசல் பெயர்களை கண்டறிந்து வெளியிடுமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிடலாம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் கூறியதாவது:

இந்தியா மதச்சார்பற்ற நாடு, நீதிமன்றமும் மதச்சார்பற்ற அமைப்பு. அரசியல் சாசனத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

இந்து என்பது மதம் அல்ல. அது வாழ்வியல் நெறிமுறை. அதனால்தான் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். கடந்த கால வரலாறுகளை தோண்டாதீர்கள். அவ்வாறு செய்தால் நாட்டின் ஒற்றுமை சீர்குலையும். நாட்டின் அமைதியை சீர்குலைக்கக் கூடாது. மக்களை பிரித்து ஆட்சி செய்வது பிரிட்டிஷாரின் கொள்கை. அந்த நிலை மீண்டும் உருவாகக் கூடாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.