திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தின் பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டம் ஆரம்பம்

அரசாங்கத்தின் பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

உயர்ந்தபட்ச ஈரப்பதன் 14 வீதத்தை கொண்ட உலர்ந்த நெல் ஒரு கிலோ 100 ரூபாவுக்கும் ஈரப்பதன் 14 வீதத்தைவிட கூடியதும் 22 வீதத்திற்கு குறைவானதுமான ஒரு கிலோ நெல் 88 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

பட்டினமும் சூழலும், கந்தளாய், பதவிஶ்ரீபுர, சேருவல, குச்சவெளி மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட அரிசி ஆலைகள் மூலம் பிரதேச செயலக ஒருங்கிணைப்பின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளாதாகவும் குறிப்பிட்டார்.

நெல்லை கொள்வனவு செய்யும் அரிசி ஆலை உரிமையாளர்கள் அதனை அரிசியாக குற்றி பிரதேச செயலகத்திற்கு வழங்க வேண்டும்.

குறித்த அரிசி எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வருமானம் குறைந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மாதமொன்றிற்கு 10 கிலோ அரிசி என்ற ரீதியில் நிவாரண உதவியாக அரசாங்கத்தினால் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.