சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்திருக்கலாம் – நிக்கி ஹாலே

வாஷிங்டன்,

சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்திருக்கலாம் என்று முன்னாள் மாகாண கவர்னரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் உள்ள நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “கொரோனா சீன ஆய்வகத்திலிருந்து வந்திருக்கலாம். அமெரிக்கா சீனாவுக்கான உதவியை நிறுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “எந்த ஒரு வலுவான அமெரிக்கரும், தன் பணம் மோசமான நபர்களுக்கு சென்றடைவதை விரும்ப மாட்டார்கள். இந்த வகையில், நான் அதிபராக தேர்வானால், அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான், சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு நிதியுதவி கிடைப்பதை முழுமையாக தடுத்து நிறுத்துவேன். கடந்தாண்டு மட்டும், 3.81 லட்சம் கோடி ரூபாயை, பல நாடுகளுக்கு உதவியாக அமெரிக்கா அளித்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுவோருக்கு தங்களுடைய வரிப்பணம் செல்கிறது என்பது வரி செலுத்துவோருக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுவேன் என நிக்கி ஹாலே, 51 அறிவிப்பு வெளியிட்டிருந்தார். வல்லரசு நாடான அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024-ல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஏற்கனவே அறிவித்து விட்டார். இந்தநிலையில் டிரம்ப்பிற்கு போட்டியாக களம் இறங்க போவதாக அதே கட்சியைச் சேர்ந்த நிக்கி ஹாலேயும் அறிவித்துள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.